Published : 18 Feb 2024 04:46 PM
Last Updated : 18 Feb 2024 04:46 PM

சென்னை | ரூ.29.93 கோடி மதிப்பிலான காசநோய், நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவு கட்டிடம் திறப்பு

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.18) திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 205 படுக்கை வசதிகளுடன், மொத்தம் 77,554 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இக்கட்டிடத்தின் தரை தளத்தில், வரவேற்பு மற்றும் தகவல் அறை, நோயாளிகள் காத்திருப்பு பகுதி, புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, ஆய்வகம், காய்ச்சல் புற நோயாளிகள் பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்), தொற்று அறுவை அரங்கம் போன்ற வசதிகளும்;

முதல் தளத்தில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அறை, உடன்இருப்போர் காத்திருப்பு அறை, ஆலோசனை அறை, மருத்துவ செய்முறை விளக்க அறை, நுரையீரல் செயல்திறன் முன்னேற்றும் சிகிச்சை மையம், தீவிர சிகிச்சைப் பிரிவு, இடைநிலை - தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சை அறை போன்ற வசதிகளும்;

இரண்டாம் தளத்தில், உணவு வழங்கும் பகுதி, உடன் இருப்போர் காத்திருக்கும் அறை, நுரையீரல் செயல்திறன் ஆய்வகம், தொற்றுப் பிரிவு – ஆண்கள் மற்றும் பெண்கள், மூச்சுக்குழாய் உள்நோக்கி பரிசோதனை அறை, மருந்துக்கட்டு அறை, சலவை நிலையம், நுரையீரல் நோய்கள் பிரிவு – ஆண்கள் மற்றும் பெண்கள் போன்ற வசதிகளும்;

மூன்றாம் தளத்தில், நூலகம், நித்திரை மதிப்பீடு ஆய்வகம், நுரையீரல் இடையீடு அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு அறை, நோய் – நுண்கிருமி நீக்கும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவுகள், நுரையீரல் நோய்கள் பிரிவு போன்ற வசதிகளும்;

நான்காம் தளத்தில், பொது ஆய்வகம், NIRT அறை, NTEP அறை, செய்முறை விளக்க அறை, சளி பரிசோதனை வார்டு போன்ற வசதிகளும்;

ஐந்தாம் தளத்தில், துணிகள் சேமிப்பு அறை, வயிற்றுபோக்கு சிகிச்சைப் பிரிவு, FLU வார்டு, டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவு – ஆண்கள் மற்றும் பெண்கள், நாய்க்கடி சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 3 மின்தூக்கிகள், சாய்வுதளம் போன்ற பிற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்குதல்

இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதய மகப்பேறியல் துறையில் நிறுவப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கேத்லேப் (Cath Lab) கருவி மற்றும் சென்னை, அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையின் நான்காவது தளத்தில் நிறுவப்பட்டுள்ள 20 கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்து அதிநவீன, உயர் சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. சங்குமணி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் மரு. தேரணிராஜன், அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மரு. டி.எஸ். மீனா, இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவர்பி.என். அனில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x