Published : 16 Feb 2024 10:01 AM
Last Updated : 16 Feb 2024 10:01 AM

வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% முதல் 94% வரை விளைச்சல் குறைந்திருக்கிறது. குறுவையைத் தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் கூட, கர்நாடகத்திடமிருந்து போதிய தண்ணீர் பெற தமிழக அரசு தவறியதால் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியவில்லை. அதனால், சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் கருகி விட்டன; அதுமட்டுமின்றி, 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களின் விளைச்சல் பாதிக்கும் கீழாக குறைந்து விட்டது. அதனால், உழவர்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டனர்.

சம்பா பருவமாவது வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதுவும் பொய்த்து விட்டது. அக்டோபர் மாதம் நடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் இப்போது அறுவடை செய்யப் பட்டு வருகின்றன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 15 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப் படும் நிலையில், நடப்பாண்டில் 12 லட்சத்திற்கும் குறைவான ஏக்கரில் தான் சம்பா/தாளடி சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவற்றிலும் விளைச்சல் வழக்கமான அளவில் பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது.

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 2700 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். கடந்த ஆண்டில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 2400 கிலோ முதல் 2500 வரை விளைச்சல் கிடைத்தது. ஆனால், நடப்பாண்டில் பெரும்பான்மையான பகுதிகளில் 1200 முதல் 1500 கிலோ வரை மட்டுமே நெல் விளைந்துள்ளது. அதாவது நெல் விளைச்சல் 40% முதல் 50% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சம்பா நெல் விளைச்சல் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அங்கு சில பகுதிகளில் ஏக்கருக்கு 172 கிலோ மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. இது வழக்கமான விளைச்சலான 2700 கிலோவுடன் ஒப்பிடும் போது வெறும் 6% மட்டுமே. இந்தப் பகுதிகளில் சம்பா விளைச்சல் 94% குறைந்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் வழக்கமான அளவில் 50%&60%க்கும் கூடுதலாக விளைச்சல் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா/தாளடி விளைச்சல் குறைந்ததற்கு தமிழக அரசு தான் பொறுபேற்க வேண்டும். அக்டோபர் மாதம் தொடங்கிய சம்பா/தாளடி சாகுபடி பிப்ரவரி இறுதியில் தான் நிறைவடையும். இந்தக் காலத்தில் மழை பெய்யும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காவிரியில் குறைந்தது வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், சம்பா நடவு தொடங்கியது முதல் ஒரு நாள் கூட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஜனவரி மாதத்தில் நெற்பயிர்கள் கதிர் வைக்கும் நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உழவர்கள் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பிப்ரவரி 3&ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மட்டுமே வினாடிக்கு 4000 கனஅடி முதல் 6000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப் பட்டது. இது சம்பாப் பயிருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சம்பா/தாளடி விளைச்சல் வீழ்ச்சிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாதது தான் காரணம் என்று உழவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பா சாகுபடிக்காக ஒவ்வொரு ஏக்கருக்கும் சராசரியாக ரூ.30,000 வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். ஆழ்துளை கிணறு இல்லாத பகுதிகளில் இந்த செலவு இன்னும் கூடுதலாக அதிகரித்துள்ளது. ஆனால், செலவு செய்த பணத்தில் பாதியைக் கூட திரும்ப எடுக்க முடியாததால், சாகுபடிக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவைப் பயிர்கள் கருகிய நிலையில், அதற்காக வாங்கிய கடனை இன்னும் திரும்ப செலுத்தாத உழவர்கள், இப்போது சம்பா சாகுபடி வீழ்ச்சி அடைந்ததால் கூடுதல் கடனை சுமக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது.

உழவர்களை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5400 என்ற அளவில் தான் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. சம்பா பயிர்களின் விளைச்சல் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு வாயைத் திறக்கவில்லை.

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய உழவர்களே இருக்க மாட்டார்கள். அதன்பின் அரிசிக்காக நான் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x