Published : 02 Feb 2018 05:18 PM
Last Updated : 02 Feb 2018 05:18 PM

செல்போன் பறிக்கும்போது விபரீதம்: நுங்கம்பாக்கம் மாணவர் கொலையில் 3 பேர் கைது

நுங்கம்பாக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் மாணவர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். செல்போனை பறிக்கும் போது நடந்த மோதலில் மாணவரை கொலை செய்த 3 இளைஞர்கள் பிடிபட்டனர்.

கடந்த ஜனவரி 19-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்தவர் ரமேஷ் (49). இவரது மகன் ரஞ்சித் (19). இவர் கிண்டி தொழில் நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்குச் சென்று வருவதாகக் கூறி கடந்த 19-ம் தேதி மாலை 7.30 மணிக்கு வெளியே சென்றுள்ளார்.

இரவு 11.45 மணி அளவில் கடைசியாக தனது தாயார் சரஸ்வதியிடம் தான் பீச் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்ப வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்து வந்த ரஞ்சித்தை லயோலா கல்லூரியில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் சிலர் மடக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய ரஞ்சித் குளக்கரை சாலை -ஷெனாய் சாலை சந்திப்பில் விழுந்து இறந்து போனார். கொலை செய்யப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் கழுத்துப் பகுதியில் ஆழமான கத்திக்குத்து காயம் இருந்தது.

கொலை பற்றி விசாரணை நடத்திய நுங்கம்பாக்கம் போலீஸார் ரஞ்சித் ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணத்தைக்கூட அறிய முடியாமல் திணறினர். அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள். அதை வைத்து கொலையாளிகளைத் தேடினர்.

சிசிடிவி காட்சியில் குளக்கரை சாலையிலிருந்து ரஞ்சித் ஓடிவரும் காட்சி இருந்தது. அப்போது போலீஸாருக்கு ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்தது. ரஞ்சித் ஓடிவரும் போதே அவரைப் பார்த்தப்படி ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் செல்வார்கள்.

அவர்கள் கொலையாளிகளா என்பது தெரியாது. ஆனாலும் ஒரு முயற்சி என்கிற ரீதியில் அவர்கள் புகைப்படம் வாகன எண்ணை வைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றவாளிகளை அழைத்தும், சிறையில் உள்ளவர்களிடமும் அவர்களது புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த செயின் பறிப்பு குற்றவாளி ஒருவர் மூன்று பேரில் ஒருவனை அடையாளம் காட்டி இவர் வடபழனி கார்த்தி. இவரும் செல்போன் பறிப்பு நபர்தான் என்று கூற போலீஸாருக்கு வேலை எளிதானது.

உடனடியாக வடபழனி, திருநகரைச்சேர்ந்த கார்த்திகேயனை (21) பிடித்து விசாரிக்க, அவர் அளித்த தகவலின் பேரில் சாலிகிராமம் கனரா பேங்க் காலனியைச் சேர்ந்த நவீன் குமார் (22), போரூர் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21) ஆகிய இருவரையும் போலீஸார் பிடித்தனர்.

போலீஸார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவர் ரஞ்சித்தை நாங்கள்தான் தாக்கினோம் என ஒப்புக்கொண்டனர். அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி போலீஸாரை திடுக்கிட வைத்தது. 'என்ன அந்தப் பையன் செத்துட்டானா?' என்று கேட்டுள்ளனர்.

'கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு செத்துட்டானா? என்று கேட்கிறீர்களா?' என்று கேட்ட போலீஸார் நடந்தது பற்றி கேட்டுள்ளனர். கார்த்தி, நவீன் குமார், சிவகணேஷ் மூவரும் செல்போன் பறிப்பில் ஈடுபடும் நபர்கள். ஆனால், இதுவரை இவர்கள் போலீஸாரிடம் சிக்கியதே இல்லையாம்.

ஜன.19 அன்றும் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் லயோலா கல்லூரி வழியாக வந்துள்ளனர். அப்போது மாணவர் ரஞ்சித் செல்போன் பேசியபடி தனியாகச் சென்றுள்ளார்.

ரஞ்சித்தை வழிமறித்த மூவரும் செல்போனைக் கொடு என்று மிரட்டியுள்ளனர். தர முடியாது என்று ரஞ்சித் போராடியுள்ளார். இதில் மூவரும் தாக்க ரஞ்சித் அங்கிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடியுள்ளார். அப்போது கார்த்தி கத்தியால் ரஞ்சித்தை குத்த, கத்திக் குத்துடன் ரஞ்சித் ஓடியுள்ளார்.

அதன் பின்னர் ரஞ்சித் ரத்தவெள்ளத்தில் பலியானதும், மறுநாள் அது செய்தியானதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

கொலை செய்த மூவரும் பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்டவர்களிடம் செல்போன் பறித்தும் போலீஸிடம் சிக்காமல் இருந்தனர். தற்போது மாணவர் கொலை மூலம் தான் முதல் முறையாக போலீஸின் கையில் சிக்கியுள்ளனர்.

செல்போனை பறிக்கும் முயற்சியில் 19 வயது மாணவர் ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின்  தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் மரணமடைந்தார்.

குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்த மகனைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கிறார் தாயார் சரஸ்வதி.

சென்னையில் இரவு நேரத்தில் தனியாக யார் சென்றாலும் மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் தாக்கி செல்போன், பணம், தங்க நகைகளை பறித்துச் செல்வது சாதாரணமாக நடக்க ஆரம்பித்துள்ளது.

செல்போன் பறிப்பு புகார்களை போலீஸார் கண்டுகொள்ளாததும், செல்போனை பறிகொடுப்பவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் போயும் தொல்லையை அனுபவிக்க வேண்டுமா என்று நினைப்பு புகார் அளிக்காமல் விடுவதாலும் இது தொடர்கதையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x