Last Updated : 15 Feb, 2024 11:49 AM

3  

Published : 15 Feb 2024 11:49 AM
Last Updated : 15 Feb 2024 11:49 AM

விருதுநகர் தொகுதியில் பாஜகவில் சீட் கேட்டு 3 பேர் கடும் போட்டி!

ராம சீனிவாசன்,  ஜவஹர், வேதா தாமோதரன்

விருதுநகர்: பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனுக்கு போட்டியாக 2 பேர் களமிறங்கி யுள்ளனர். இதனால் யாருக்கு சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அமமுக சார்பில் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழித் தேவன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனிய சாமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் களமிறங்க பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனின் ஆதரவாளர்கள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் வாக்காளர் களிடம் துண்டு பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர்.

அதே நேரம், விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தனது அண்ணன் ஜவஹருக்கு வாய்ப்பு கேட்டு கட்சி மேலிடத்தை அணுகியுள்ளார். அதற்கேற்ப அண்மையில் நடை பெற்ற கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் ஜவஹர் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரனும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை அகமுடையார், தாய் மறவர் என்பதால் முக்குலத் தோர் வாக்கை சேகரிக்கும் திட்டத்தில் களப்பணியைத் தொடங்கியுள்ளார்.

அதோடு, இவரது தந்தை காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, தேவேந்திர குல வேளாளரை பொதுப் பட்டியலில் சேர்க்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்தவர் வேதா தாமோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கட்சியில் இம்முறை யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் 3 அணிகளாக பாஜகவினர் காத்தி ருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x