Published : 10 Feb 2018 08:12 PM
Last Updated : 10 Feb 2018 08:12 PM

ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு திட்டங்கள் முடக்கம்: தினகரன் கண்டனம்

ஆர்.கே.நகர் தொகுதியில் அரசுத் திட்டப் பணிகளை முடக்கிவைத்து மக்களை வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆளும் அரசை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதி மக்கள் தோற்கடித்ததால் அந்த தொகுதி மீதும், அங்குள்ள மக்கள் மீதும் அரசு தனது வஞ்சத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலமாக அரசு மேற்கொள்ளும் இந்த பழிவாங்கும் போக்கு மிகவும் கீழ்த்தரமானது. ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறம் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் இப்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 47-வது வட்டம், கொருக்குப்பேட்டை பாரதி நகரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதுபோல அரிநாராயணபுரத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

41-வது வட்டம், கொருக்குப்பேட்டை எண்ணூர் சாலையில் இரண்டு ரயில்வே கடவுகளில் ரூ.117 கோடியில் பாலம் அமைப்பதற்கான திட்டமும் போடப்பட்டுள்ளது. அதுபோல, ’அம்மா வாரச் சந்தை’ அமைக்கும் பணியையும் அரசு முடக்கி வைத்திருக்கிறது.

இத்தொகுதியில் எனது வெற்றிக்காக பாடுபட்ட காரணத்திற்காக 38-வது வட்டக் கழக செயலாளர் நாகராஜ், பொன்பாண்டி கணேசன் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து இதுபோல செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இத்தொகுதி மக்களை வஞ்சிக்கும் அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். எனவே, வஞ்சிக்கும் மனப்பான்மையை ஆட்சியாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று தினகரன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x