Published : 14 Feb 2024 10:38 PM
Last Updated : 14 Feb 2024 10:38 PM

மதுரை கல்வி அதிகாரி ‘திடீர்’ இடமாற்றம்: மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

கோப்புப்படம்

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரி, பொறுப்பேற்ற 2 நாட்களிலேயே உடல்நிலை சரியில்லை, பதவி உயர்வு வேண்டாம் எனக்கூறி ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவே திரும்பி சென்ற சம்பவம், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட அளவில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளை நிர்வகிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செயல்படுகிறார். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை அதிகரிக்கவும் மாவட்ட அளவில் அரசுத் தேர்வுகளை நடத்தும் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக வருவாய்க் கோட்ட அளவில் கல்வி மாவட்டம் பிரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். இதுபோல், மாநகராட்சி பள்ளிகளை நிர்வகிக்க, தனியாக கல்வி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் கீழ், மாநகராட்சி பள்ளிகளை நிர்வகிப்பார்.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி அதிகாரியாக மாரிமுத்து, பதவி வகித்து வந்தார். இவர், திடீரென்று சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக சென்றார். இவருக்கு பதிலாக மதுரை சருகுவலையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஷ்வரி, மாகநராட்சி பள்ளிகள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்று கடந்த 2 நாட்களாக மாநகராட்சி பள்ளிகள் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்நிலையில், திடீரென்று இவர், தனது உடல்நிலையை காரணம் காட்டி, தனக்கு கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வேண்டாம் எனக்கூறி மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், ஏற்கெனவே, தான் பணிபுரிந்த சருகுவலையப்பட்டி பள்ளி தலைமை ஆரியராகவே திரும்பி சென்றார். இச்சம்பவம், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது உமா மகேஷ்வரிக்குப் பதிலாக மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரியாக மதுரை ஆணையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இன்று உடனடியாக மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பதவி விலகிய உமா மகேஷ்வரி ஒரிரு மாதங்களில் ஒய்வு பெற உள்ளார். எனவே, அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் பொறுப்பேற்ற 2 நாளில் சென்றுவிட்டார். இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தற்போது புதிய மாநகராட்சி கல்வி அதிகாரியாக ரகுபதியை நியமனம் செய்துள்ளார், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x