Published : 14 Aug 2014 08:45 AM
Last Updated : 14 Aug 2014 08:45 AM

கார் கதவை திறக்க முடியாமல் சிக்கித் தவித்த 4 குழந்தைகள் பலி: தூத்துக்குடி அருகே கோயில் விழாவில் பரிதாபம்

தூத்துக்குடி அருகே காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இசக்கியம்மன் கோயிலில் கடந்த இரு நாட்களாக கொடை விழா நடைபெற்றது. தூத்துக்குடி ராஜபாண்டி நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பலர் குடும்பத்தோடு விழாவில் பங்கேற்றனர். இவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தங்கியிருந்தனர்.

4 குழந்தைகள் மாயம்

இவர்களுடன் வந்திருந்த குழந்தைகள் புதன்கிழமை காலை கோயிலுக்கு அருகே உள்ள மைதானத்தில் விளை யாடிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த கன்னியப்பன் மகள் இசக்கியம்மாள்(8), அந்தோணிசாமி மகள் முத்தழகு (9), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கொங்கல்ராஜ் மகன் ஆதி (6), சங்கர் மகன் மோசஸ் (6) ஆகிய 4 குழந்தைகளையும் திடீரென காணவில்லை. வேடநத்தம் கிராமம் முழுவதும் உறவினர்கள் தேடியும், குழந்தைகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

காருக்குள் மரணம்

கோயிலை ஒட்டி இரும்புவேலி போட்டிருந்த வளாகத்துக்குள் நின்றுகொண்டிருந்த காருக்குள் குழந்தைகள் விளையாடிய தாக, அப்பகுதியில் நின்ற சிறுமி ஒருவர் தகவல் தெரிவித் துள்ளார். உறவினர்கள் ஓடிச் சென்று, பூட்டியிருந்த காரை திறந்து பார்த்தனர். காருக்குள் 4 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இதனைப் பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சோகமான கிராமம்

தகவல் அறிந்ததும் வேடநத்தம் கிராமமே அங்கு திரண்டது. கடந்த இரு தினங்களாக கோயில் விழா காரணமாக உற்சாகம் களைகட்டியிருந்த வேடநத்தத்தில் சோகம் சூழ்ந்து கொண்டது. 4 குழந்தைகளின் சடலங்களையும் குளத்தூர் போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.துரை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உமா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் செந்தில்வேல் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். குழந்தைகள் எவ்வாறு இறந்தனர் என்பது குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

நிகழ்ந்தது எப்படி?

வாகனக் கடன் கட்டாததால் பாரத ஸ்டேட் வங்கியால் பறிமுதல் செய்யப்பட்ட காரில்தான் விபத்து நடந்துள்ளது. குழந்தைகள் 4 பேரும் காலை 8 மணியளவில் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர். குழந்தைகள் உள்ளே சென்றதும் கார் கதவு தானாக மூடிக் கொண்டது. கதவை திறக்கும் விதம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.

கதவை திறக்க முயன்று பயனளிக்காததால் கதவை தட்டியுள்ளனர். கோயிலில் ஒலி பெருக்கி ஒலித்ததாலும், கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாலும் குழந்தை களின் அலறலும், அவர்கள் கார் கதவை தட்டிய ஓசையும் வெளியே கேட்கவில்லை.

காலை 9 மணி முதல் பல இடங்களில் குழந்தைகளை தேடிய உறவினர்கள் 4 மணி நேரம் கழித்து பகல் 1 மணியள வில்தான் காரில் குழந்தைகள் இருப்பதை அறிந்துள்ளனர். அதற் குள் 4 குழந்தைகளும் மூச்சுத் திணறி இறந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x