Published : 25 Feb 2018 09:54 AM
Last Updated : 25 Feb 2018 09:54 AM

கர்நாடகாவின் புதிய நீர்மின் திட்டத்துக்கு அனுமதி கூடாது: அவசரம் கருதி மத்திய அரசுக்கு கடிதம் எழுத நீரியல் வல்லுநர்கள் வலியுறுத்தல்

காவிரி தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே செயல்படுத்த திட்டமிட்டுள்ள சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்துக்கு எந்த வகையிலும் அனுமதியளிக்கக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசு அவசரமாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தின் அருகே காவிரி ஆற்றின் மீது சிவசமுத்திரம் அருவி தோன்றி விழுகின்ற ககனசுக்கி என்ற இடத்தில் அணை ஒன்றைக்கட்டி நீர்மின் திட்டத்தை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். அதற்காக காவிரி வனச்சரகப் பகுதியில் 3.4 கி.மீ தூரத்துக்கு சுமார் 15.5 மீட்டர் உயரத்துக்கு தடுப்புச்சுவர் (அணை) கட்டி நீரை தேக்கி, நீர்மின் நிலையத்துக்கு பயன்படுத்த உள்ளனர். இதற்காக 165 ஹெக்டேர் பரப்பளவில் வனச்சரகம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த உள்ளதாகவும், இந்த அணை கட்டப்பட்டால் 90 ஹெக்டேர் பரப்பளவில் காவிரி வனச்சரகப்பகுதியில் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடக அரசு முதன்முதலில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கேட்டு 1987-ம் ஆண்டிலேயே விண்ணப்பித்துள்ளது. நடுவர் மன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்ததை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றும் முயற்சியில் கடந்த 2017-ல் மீண்டும் கர்நாடகம் விண்ணப்பித்துள்ளது. அதில், 300 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் இலக்குடன் 2 பகுதிகளாக இத்திட்டத்தை நிறைவேற்றி குறைந்த செலவில் மின் உற்பத்தியை செய்யவுள்ளதாக விண்ணப்பத்தில் கூறியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்நிலை வல்லுநர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

விண்ணப்பம் தள்ளுபடி

அதில், ‘சம்பந்தப்பட்ட பகுதியை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், பாதுகாக்கப்பட்ட வனச்சரகம் உள்ள பகுதியாக அறிவித்துள்ளது. கர்நாடக மின் உற்பத்தி நிறுவனமானது, இத்திட்டத்தை 2 பிரிவாக செயல்படுத்த திட்டமிட்டு அதற்காக தனித்தனியாக விண்ணப்பித்துள்ளது.

அப்படி விண்ணப்பிக்கும்போது, சுற்றுச்சூழல் அனுமதி தனித் தனியாக வழங்க முடியாது என்றும், 2 விண்ணப்பங்களையும் ஒருங்கிணைத்து ஒரே அனுமதியாகப் பெறுவதற்கு ஏற்ப ஒருங்கிணைத்து விண்ணப்பிக்க வேண்டும்’ என கூறியும் தள்ளுபடி செய்துவிட்டது.

அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பெரிய அளவில் பாதிக்காத வகையில் நீர்வீழ்ச்சிகளை பயன்படுத்தி குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் திட்டம் என்பதால் மீண்டும் இதில் உள்ள குறைகளை சரிசெய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி காவிரி விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மீண்டும் தனது வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நீரியல் வல்லுநர் ஜனகராஜன் கூறியபோது, “கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கூடிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்நிலை வல்லுநர் குழு, கர்நாடகத்தின் பழைய விண்ணப்பத்தை (14.11.2017) நிராகரித்தாலும், சிவசமுத்திரம் திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்க ஒரு வழிகாட்டலை சுற்றுச்சூழல் அமைச்சகமே செய்துள்ளது.

இதை கவனத்தில்கொண்டு தமிழக அரசு உடனடியாக கடிதம் எழுதி அத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தனது நிலைப்பாட்டை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x