Last Updated : 17 Feb, 2018 09:52 PM

 

Published : 17 Feb 2018 09:52 PM
Last Updated : 17 Feb 2018 09:52 PM

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சட்ட விரோத மது விற்பனை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சட்ட விரோத மது விற்பனையால் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 129 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் எதிரொலியாக ராமேசுவரம் தீவில் இயங்கி வந்த 11 மதுக்கடைகளில் 8 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3 மதுக்கடைகள் ராமேசுவரம் அருகே பாம்பனில் இயங்கி வருகின்றன. பாம்பனில் இயங்கும் மதுக்கடைகளையும் அகற்றி மது இல்லா தீவாக கலாம் பிறந்த ராமேசுவரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்து தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. மேலும் ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தில் புதிதாக மதுக்கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் உள்ளது.

இந்நிலையில் பாம்பன் மதுக்கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதியில் கூடுதல் பணத்திற்கு விற்பனை செய்வது தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆளும் கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் குடிசைத்தொழில் போல் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லாவிட்டாலும் அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை எந்த நேரத்திலும் ராமேசுவரம் பகுதியில் மதுபாட்டில்கள் விலைக்கு கிடைக்கிறது. இதனால் தடையில்லாமல் மது தேடி வருவதால் இளைஞர்கள், மீனவர்கள் என பலதரப்பினரும் கூடுதல் பணம் கொடுத்து இதனை வாங்கிக் குடிப்பதால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.

இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு நுழைவாயில் அருகே கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான திருப்பதி தங்கும் விடுதியின் கிணற்றின் மேல் பகுதி மது அருந்தும் இடமாகவும், மோட்டார் அரை கஞ்சா புகைப்பிடிக்கும் பகுதியாகவும் மாறியுள்ளது. இங்கு மது அருந்தும் குடிமகன்கள் போதை தலைக்கேறிய நிலையல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களுடன் ரகளையில் ஈடுபடுவது அன்றாட வழக்கமாகி வருகிறது.

மேலும் ராமேசுவரத்தில் மதுபான விற்பனையை தடுத்து, மீனவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x