Published : 04 Feb 2018 12:57 PM
Last Updated : 04 Feb 2018 12:57 PM

தமிழ்நாடு இல்லம் பெயர் மாற்றம் விவகாரம்; பாஜகவின் மொழிவெறித் தூண்டுதலுக்கு துணைபோவதா?- அதிமுகவுக்கு ஸ்டாலின் கண்டனம்

டெல்லியில், திராவிட இயக்கத்தின் சாதனையாக இருக்கும் 'தமிழ்நாடு இல்லம்' என்ற பெயரை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றவோ, அழிக்கவோ கூடாது என்று முதல்வர் பழனிசாமிக்கு வலியுறுத்துவதோடு பாஜகவின் மொழிவெறித் தூண்டுதலுக்கு துணைபோக வேண்டாம் என எச்சரிப்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தமிழக அரசின் சார்பில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் விருந்தினர் இல்லத்திற்கு வைக்கப்பட்டிருந்த 'தமிழ்நாடு இல்லம்' என்ற பெயரை, "வைகைத் தமிழ் இல்லம்", "பொதிகைத் தமிழ் இல்லம்" என்று பெயர் மாற்றம் செய்து, 'தமிழ்நாடு' என்ற பெருமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்கத் துணிந்துள்ள அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'தமிழ்நாடு', ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுடன் ஒன்றியிருக்கின்ற, உயிரோட்டமுள்ள ஒரு உயரிய சொல். அந்த உணர்வைச் சிதைத்திடும் வ்கையில், தலைநகர் டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் பெயரை மாற்றி, டெல்லியில் உள்ள தனது மேலாதிக்க எஜமானர்களை மகிழ்வித்து, தனது பணிவு மிகுந்த விசுவாசத்தை வெளிக்காட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பது மிகுந்த வேதனைக்குரியது.

டெல்லியில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் கேரளா இல்லம், பிஹார் இல்லம் என்றெல்லாம் விருந்தினர் இல்லங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 'தமிழ்நாடு இல்லம்' என்ற கம்பீரமான பெயர் மட்டும் இருக்கக்கூடாது என மத்தியில் உள்ள பாஜக அரசு விடுக்கும் மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கி, தமிழக மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் உணர்வுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விபரீத விளையாட்டை நடத்தியிருக்கிறார்.

சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர்சூட்டி, வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் அண்ணா, 'தாய்க்குப் பெயர்சூட்டிய தனயன்', என்று தமிழ் உலகத்தில் புகழப்படுகிறார்.

தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்டதையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியபோது, "என்னுடைய உடல்நிலை கருதி இந்தவிழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தடுத்தனர். ஆனால், அதைமீறி நான் இங்கே வந்திருக்கிறேன். காரணம், தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்டதற்காக நடக்கும் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், இந்த உடலும் உயிரும் இருந்தென்ன பயன்?" என்று உணர்ச்சிவயப்பட்டு உரையாற்றினார்.

அப்படிப்பட்ட பெயரின் அருமை பெருமைகளையும், தமிழர்களுக்கு அதனால் தலைநகர் டெல்லியில் கிடைத்த தனிச்சிறப்பினையும் மறந்துவிட்டோ அல்லது அந்த வரலாறு குறித்த அறியாமையாலோ, இப்படியொரு பெயர் மாற்றத்தை நிகழ்த்தி, தமிழகத்திற்கும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்த அரசு மாபெரும் துரோகம் செய்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரியமான, ஆழ்ந்த உணர்வுகளின் மீது மத்திய பா.ஜ.க. அரசின் மொழி வெறித்தூண்டுதலால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்றே இச்செயலை எண்ணுகிறேன். ஆகவே, உப்புச்சப்பு இல்லாத காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல், டெல்லியில், திராவிட இயக்கத்தின் சாதனையாக இருக்கும் 'தமிழ்நாடு இல்லம்' என்ற பெயரை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றவோ, அழிக்கவோ கூடாது என்று வலியுறுத்தும் அதேநேரத்தில், புதிய பெயர் சூட்டுவிழா என்ற திரைமறைவு காரணங்களைக் கூறி, டெல்லியில் 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பார்க்க விரும்பாதவர்களுக்கும், அந்த அரிய பெயரை உச்சரிக்கக் கூச்சம் கொள்பவர்களுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிபணிந்து துணைபோக வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x