Published : 17 Feb 2018 10:36 AM
Last Updated : 17 Feb 2018 10:36 AM

காதல் திருமணம் செய்த இளைஞரை கொன்ற காதலியின் தாய், சகோதரர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

காதல் திருமணம் செய்த இளைஞரை குத்திக் கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே ஆலடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணகுமார்(29). அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் இந்திரா. இவர்கள் இருவரும் 2004-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்களது திருமணத்துக்கு இந்திரா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணகுமார், அவரது உறவினர்களான சுகுமாறன், விஸ்வநாதன் ஆகியோர் ஆலடிக்காட்டில் உள்ள பிள்ளையார் திடல் பகுதியில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, முன்விரோதம் தொடர்பாக அங்கு வந்த இந்திராவின் சகோதரர் ரவி(27) மற்றும் உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த ஆர்.தவமணி(34), சிலாத்தணி கிராமத்தைச் சேர்ந்த கே.கைலாசம்(20) ஆகியோர் கிருஷ்ணகுமாரை வழி மறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் அந்த இடத்திலேயே இறந்தார். இதைத்தடுக்க முயன்றதில் காயம் அடைந்த சுகுமாறன், விஸ்வநாதன் ஆகியோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாகுடி போலீஸார், ரவி, தவமணி மற்றும் கைலாசம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதால், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுகுமாறன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 2008-ல் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பின்னர், வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், இவ்வழக்கில் தொடர்புள்ளதாக இந்திராவின் தாய் செல்லம்மாள்(46), சகோதரி அமுதா, உறவினர்கள் ஆலடிக்காடைச் சேர்ந்த எ.மாரிமுத்து(30), பேராவூரணி அருகே உள்ள முதுகாடைச் சேர்ந்த செ.மதியழகன்(26) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், கொலை குற்றம் சாட்டப்பட்ட ரவி, கைலாசம், தவமணி, மதியழகன், செல்லம்மாள், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி எம்.சுமதி சாய்பிரியா உத்தரவிட்டார்.

வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அமுதா இறந்துவிட்டதால், அவர் தண்டனை பெற்றவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x