Last Updated : 06 Feb, 2024 09:18 PM

 

Published : 06 Feb 2024 09:18 PM
Last Updated : 06 Feb 2024 09:18 PM

“மத, சாதிப் பிரச்சினையைத் தூண்டி, அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” - கனிமொழி @ குமரி

நாகர்கோவில்: “ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோயிலில் இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய என 6 திமுக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் பரிந்துரையை கோரிக்கைகளை வழங்கினர்.

குமரி மாவட்ட கோதையாறு பாசன திட்டக்குழு தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, தேவதாஸ் உட்பட திரளானோர் கனிமொழி எம்பியிடம் அளித்த கோரிக்கை மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்தின் உயிர் நாடியான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் தூர்வாரப்படாமலே கிடக்கின்றன. இதனால் நீர்பிடிப்பு தன்மை குறைந்துள்ளது. எனவே இந்த அணைகளை முழுமையாக தூர்வாரி புனரமைக்க வேண்டும். கடல் நீர் உட்புகுவதை தடுத்து, நீர்நிலைகளில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, கடற்கரையோர ஏவிஎம் சானலை புனரமைத்து படகு போக்குவரத்து ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 4500 குளங்களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்க வேண்டும். கேரளாவை போன்று அரசே தேங்காயை கொள்முதல் செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து அவற்றை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசியது: “இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல மக்களைப் பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து மக்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது.

மக்கள் சந்திக்கக் கூடிய அன்றாட பிரச்சினைகளான வேலைவாய்ப்பு பிரச்சினை, விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது, மீனவர்களுடைய உரிமைகளை ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுவது ஆகியவை மறக்கடிக்கப்பட்டு, மதக் கலவரத்தையோ, சாதிப் பிரச்சினையையோ தூண்டி, அதில் அரசியல் செய்யலாம் என நினைக்கிறது பாஜக. இதனை சரியாக புரிந்துகொண்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த அமைக்கப்பட்டதுதான் இந்த தேர்தல் குழு.

மத்தியில் ஆட்சி நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்துக்கான உழைப்பை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என்றார்.

நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், திமுக மகளிரணி செயலாளரும்,முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x