Published : 06 Feb 2024 05:43 AM
Last Updated : 06 Feb 2024 05:43 AM

25 பொறியியல் கல்லூரிகளை மூட நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் 25 பொறியியல் கல்லூரிகள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அவை மூடப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழக உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிதிப் பற்றாக்குறை நாடு முழுவதும் உள்ளது. பல்கலைக்கழகங் களைப் பொறுத்தவரை சிலவற்றில் பற்றாக்குறை உள்ளது. சிலவற்றில் நிதி அதிகமாக உள்ளது. பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்களில் பற்றாக்குறை உள்ளது. இவற்றை சரிசெய்துவிடலாம். உயர்கல்வியில் 50 சதவீதத்துக்கு மேல் தமிழகத்தில் சேர்க்கை உள்ளது. இந்திய அளவில் நாம் முதலிடம் வகிக்கிறோம்.

சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர், முதல்வருடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாக ரீதியான கருத்துகள்: அரசு என்பது மக்களால் தேர்தல்மூலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் நியமிக்கப்பட்டவர். அவரை குறைகூற விரும்பவில்லை. பிப்.12-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. ஆளுநரை அழைத்துள்ளோம். ஆளுநரைப் பொறுத்தவரை அரசியல் ரீதியானவற்றைத் தவிர, நிர்வாக ரீதியான கருத்துகள் கூறினால் அவற்றை ஏற்கத் தயாராக உள்ளோம்.

பேராசிரியர் நியமனத்தை பொறுத்தவரை நிதி இருப்பை பொறுத்து நியமிக்கப்படுகின்றனர். தற்போதுகூட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேர் நியமிக்கப்படுகின்றனர். அனைத்து துறைகளிலும் காலியிடங்கள் உள்ளன. அதேநேரம் நிதிநிலைமை குறித்தும் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 74 சதவீதம் சென்று விடுகிறது. இதற்கிடையே பேரிடர்களையும் அரசு சந்திக்க வேண்டியிருப்பதால், பிரச்சினைகள் உள்ளன. அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தமோசமான சூழலும் இல்லை. சில கல்லூரிகளை நடத்த முடியாமல் உள்ளனர். அதுதொடர்பாக 7 கல்லூரிகள் விண்ணப்பித் துள்ளனர். அதேபோல், அண்ணாபல்கலைக்கழகத்தின் விசாரணையில் மோசமான கல்லூரிகளாக 25 கல்லூரிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றையும் மூட வேண்டிய சூழல் உள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் இருந்தால் அவை ஏற்கப்படும். மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், முதல்வர் தலைமையில் இரண்டும் ஒப்பிடப் பட்டு முடிவெடுக்கப்படும்.

அரசின் முடிவே இறுதி: தமிழக பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவில் உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தாலும் அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, துறையின் செயலர் கார்த்திக், பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x