Published : 01 Feb 2018 09:18 AM
Last Updated : 01 Feb 2018 09:18 AM

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் விரிவாக்கப் பணியால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து புறப்படும்: மலை ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லை

நடைமேடை விரிவாக்கப் பணிகள் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, இலவசப் பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து இன்று முதல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக சென்னை வரை நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் தினமும் இரவு 7.45 மணிக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 5.05 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. சென்னையில் இருந்து உதகை செல்ல விரும்புபவர்கள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையம் வந்து, பின்னர் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயிலில் பயணிப்பது வழக்கம்.

31 நாட்கள் சேவை ரத்து

1882-ல் தொடங்கப்பட்ட பழமையான மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தற்போது 14 பெட்டிகள் கொண்ட ரயில் மட்டுமே நிற்க முடியும். கூடுதல் பெட்டிகளை இணைப்பதற்கு தகுந்தாற்போல் நடைமேடை வசதி இல்லை. இந்நிலையில், 23 பெட்டிகள் கொண்ட ரயிலை நிறுத்தும் வகையில் நடைமேடை நீட்டிக்கப்படுகிறது. முழுவீச்சில் இப்பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (பிப்.1) முதல் மார்ச் 3-ம் தேதி வரை (31 நாட்கள்) கோவை - மேட்டுப்பாளையம் இடையே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

‘பயணிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, திருப்பூருக்கும், கோவை - மேட்டுப்பாளையம் ஆகிய மார்க்கங்களில், முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளன. கோவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களிலும் இதற்கான உதவி மையங்கள் செயல்படும். 9003956955 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில் இருந்து வருவோருக்கு கோவையில் காலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அழைத்துச் செல்ல 2 பேருந்துகள் தயாராக நிறுத்தப்பட்டு இருக்கும். இதேபோல், மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய மாலை 6.30 மணிக்கு கோவைக்கு முதல் பேருந்தும், திருப்பூருக்கு இரவு 7.40 மணிக்கு அடுத்த பேருந்தும் புறப்படும். இரவு 9.30 மணியளவில் திருப்பூரில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை அவர்கள் அடையலாம்’ என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி 4 முறை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலும் இன்று முதல் காரமடையில் இருந்து இயக்கப்பட உள்ளது. எனினும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகை செல்லும் மலை ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x