Published : 07 Feb 2018 12:31 PM
Last Updated : 07 Feb 2018 12:31 PM

ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த ஏபி 21 சாலை: 27 ஆண்டுகள் கழித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிறிசேன திறந்து வைப்பு

இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை-பருத்தித்துறை ஏபி 21 சாலையை 27 ஆண்டுகள் கழித்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புவியியல் அமைவின் அடிப்படையில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறையும், காங்கேசன்துறையும் முக்கிய துறைமுகங்களாக விளங்குகிற்து. இதில் 55 கிலோமீட்டர் நீளமுள்ள ஏபி21 எனப்படும் சாலை காங்கேசன்துறை முதல் பருத்தித்துறை வரையிலான கடற்கரை சாலையாகும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டரங்கத்தின் தென் கிழக்கு பகுதியில் துவங்கும் ஏபி21 சாலை காங்கேசன் துறை வழியாக பருத்தித்துறையின் கலங்கரை விளக்கம் வரையிலும் நீடிக்கிறது. இந்த சாலையின் சிறப்பம்சம் என்னவென்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கியமான பெரும் சாலைகளின் தொடக்க மற்றும் முடிவுப் புள்ளியாக இது அமைந்துள்ளதுடன் மட்டுமின்றி வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் பகுதியையும் இந்த சாலை மூலம் இணைக்கலாம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மிகவும் முக்கியமான சாலையாக உள்ள ஏபி 21 சாலை கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் இந்தப் பகுதியில் உள்ள பலாலி விமான நிலையம், ராணுவம் கையப்படுத்தியுள்ள நிலங்கள் இவற்றை மீட்டெடுத்து மக்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்பது இலங்கை வடமாகாண மக்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம மற்றும் நகர சபைகளில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் இலங்கை அதிபருமான மைத்திரிபால சிறிசேன, ''கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும், அதன் பின்னர் பாதுகாப்பு பிரச்சினைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை-பருத்திதுறை ஏபி21 கடற்கரை சாலை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது'' என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் மயிலிட்டியில் ஏபி 21 சாலை வழியாக அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சயிர் என். வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ராணுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

27 ஆண்டுளுகளாக போக்குவரத்து சேவையை கண்டிராத காங்கேசன்துறை-பருத்தித்துறை ஏபி 21 சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டிருப்பதாலும், பேருந்து இயக்கப்பட்டிருப்பதால் யாழ்ப்பாணம் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x