Last Updated : 03 Feb, 2024 08:35 PM

3  

Published : 03 Feb 2024 08:35 PM
Last Updated : 03 Feb 2024 08:35 PM

'கார்த்தி சிதம்பரத்துக்கு தேர்தலில் சீட் தரக் கூடாது’ - காங். நிரவாகிகள் கூட்டத்தில் தீர்மானம் @ சிவகங்கை

சிவகங்கை: “கார்த்தி சிதம்பரத்துக்கு தேர்தலில் சீட் கொடுக்க கூடாது” என சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தலைமையிலான காங்கிரஸார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் எம்பி போட்டியிட முடிவு செய்து, அதற்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி வந்தனர். அதற்கு எதிர்ப்பாக இ.எம்.சுதர்சதன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் காரைக்குடி மானகிரியில் தனியாக பூத் கமிட்டி கூட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து பேசி வந்தனர்.

இந்நிலையில், அத்தரப்பினர் இன்று மாலை ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கையில் கூட்டம் நடத்தினர். இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். மேலும், ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை என்ற விதத்தில் கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் அவருக்கு காங்கிரஸில் சீட் கொடுக்க கூடாது என 3 தீர்மானஙகளை நிறைவேற்றினர். மேலும் இந்த தீர்மானஙகளை தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் ஆதாரவாளர்கள் தனியாக கூட்டம் நடத்தினர். இதில் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அருள்பெத்தையா, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரமே போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். ஏற்கெனவே சிவகங்கை தொகுதியை திமுக கேட்டு வரும்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸில் ஒருத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது மேலும் சிக்கல் ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x