Published : 04 Feb 2018 10:24 AM
Last Updated : 04 Feb 2018 10:24 AM

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.28-க்கு விற்பனை

வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.28-ஆக சரிந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு காய் கறிகள் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த மாதத்தில் ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று ரூ.28-க்கு விற்கப்பட்டது. அதேபோல், ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயம் நேற்று கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்டது. வெங்காயத்தைப் போலவே பிற காய்கறிகளின் விலையும் நேற்று வெகுவாக குறைந்திருந்தது.

தக்காளி ரூ.9, உருளைகிழங்கு ரூ.14, கேரட் ரூ.15, முள்ளங்கி ரூ.7, கத்திரிக்காய் ரூ.10, புடலங்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.15-க்கு விற்கப்பட்டன.

சிறப்பான விளைச்சல்

காய்கறிகளின் விலை வீழ்ச்சி தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகி எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, “உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் வெங்காயத்தின் விளைச்சல் சிறப்பாக உள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இந்த மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை குறைவாகவே இருக்கும். முகூர்த்த நாட்களில் மட்டும் விலை சற்று உயரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x