Published : 02 Feb 2018 09:55 PM
Last Updated : 02 Feb 2018 09:55 PM

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பொறுப்பா?- அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் பொறுப்பு வழங்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என்ற யோசனைக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் பொதுச் செயலாளரான  சசிகலாவை முதல்வராக்க முயற்சிகள் நடந்தன. இதனால் ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், தன் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறி ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கினார். அதன் பின்னர் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதும், ஓபிஎஸ் தனி அணியாக இயங்கியதும், பின்னர் டிடிவி ஓரங்கட்டப்பட்டு ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் இணைந்ததும் முன்கதை.

ஆனால் ஓபிஎஸ் இணையும் போதே உடனிருந்த கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் போன்றோர் தங்களுக்கும் உரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. நிதி அமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர்  ஆனார்.

ஆனால் மற்ற யாருக்கும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இடையில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய மைத்ரேயன், கே.பி.முனுசாமி போன்றோர் பின்னர் அடக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்காக ஓபிஎஸ் எந்த உதவியும் செய்யவில்லை என்ற ஆதங்கம் இன்றுவரை அவர்கள் அணியினர் மத்தியில் உண்டு.

குறைந்தபட்சம் மாவட்டச் செயலாளர், கட்சி நிர்வாகிகள் அளவிலான பதவி கேட்டும் கிடைக்கவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைத்தாலும் அதிகாரம் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கையில் தான் உள்ளது. ஓபிஎஸ் எப்போதும் நெம்பர் 2 தான் என்பது அவரது ஆதரவாளர்களால் வெளிப்படையாகவே பேசப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல இடங்களில் ஓபிஎஸ்ஸை பேசவிடாமல் சைகையால் அமரவைத்து எடப்பாடி பழனிசாமி எழுந்து பதிலளித்ததை அனைவரும் கவனிக்கத்தான் செய்தனர். இடையில் தனது கோரிக்கைக்காக பிரதமரை சந்திக்கச் சென்றும் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார் ஓபிஎஸ்.

இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினருக்கு பதவி வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஓபிஎஸ் அணியினர் பதவி கிடைக்கும் வகையில் மாவட்டங்களை மேலும் கூடுதலாக பிரிக்கலாம் என்று யோசனை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதை ஆரம்ப நிலையிலேயே அனைவரும் எதிர்த்துள்ளனர். எங்கள் அதிகாரத்தை குறைக்கப் பார்க்கிறீர்களா என்று கேட்டு ஆளாளுக்கு சத்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது நடப்பவற்றை ஓபிஎஸ் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தாராம். பின்னர் கூட்டத்தில் இது பற்றி பிறகு விவாதிக்கலாம் என்று தள்ளிவைத்துள்ளனர்.

ஆனாலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கும் வகையில் 78 மாவட்டங்களாக பிரிக்கும் எண்ணத்தில் அதிமுக தலைமை உள்ளதாக கூட்டத்தில் வந்தவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு பிரிக்கும் பட்சத்தில் அதன் மூலம் புதிய பிரச்சினை உருவாகும் என்று கூறுகின்றனர்.

இதனிடையே இன்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியில் உள்ள அனைவரும் பங்கேற்க மைத்ரேயனும், நத்தம் விஸ்வநாதனும் மட்டும் பங்கேற்கவில்லை. இது குறித்து மைத்ரேயனிடம் செய்தியாளர் ஒருவர் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அழைப்பு இல்லை, நம்மையெல்லாம் எங்கே மதிக்கப் போகிறார்கள் என்று கூறினாராம்.

உள்ளாட்சித் தேர்தல் வரை இதே கட்டுக்கோப்புடன் தள்ளிச்சென்று ஓரளவு கணிசமான வெற்றியைப் பெற்றால் தான் தனக்கு பிரச்சினை இல்லை என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனாலும் நீருபூத்த நெருப்பாகத்தான் அதிமுக உட்கட்சி விவகாரம் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x