Published : 02 Feb 2024 03:35 PM
Last Updated : 02 Feb 2024 03:35 PM

வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் அகஸ்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கரூர்: 1000 ஆண்டுகள் தொன்மையான திருமுக்கூடலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் ரூ.5 கோடியில் புனரமைப்பு பணியினை தொடங்கி வைத்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் 1000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோயில் ரூ.5 கோடியில் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தலைமையில் கோயில் வளாகத்தில் இன்று ( ஜன. 2ம் தேதி ) நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அடிக்கல் நாட்டி புனரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். கரூர் எம்.பி. செ.ஜோதி மணி, எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் ( குளித்தலை ), க.சிவகாமசுந்தரி ( கிருஷ்ண ராயபுரம் ), இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநர் சி.குமர துரை, கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வரின் உத்தரவுகள் மற்றும் உற்சாகத்தின் காரணமாக இந்து சமய அறநிலைத் துறை புது பொலிவுடன் வீறு நடைபோடுகிறது. அந்த வகையில் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு திரு பணிகள் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக கடந்த இரு நிதியாண்டுகளில் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கியுள்ளது.

உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 கோயில்களில் ரூ.304.84 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுப் பெற்றுள்ளது. 13 கோயில்களுக்கு குடமுழுக்குக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் திருக்கோயில்களின் பணிகள் உயர்வு பெற்றது என்று சொல்வார்கள். அதேபோல் ராஜ ராஜ சோழனுக்குப் பிறகு இந்த ஆட்சியில் தான் சிதிலமடைந்த திருக்கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு திரும்ப கொண்டு வருவதற்கு முயற்சி செய்யும் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

அகஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.5 கோடியில் 11 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கோயிலுக்கு எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற குறிப்பு இல்லை. ஆனால் இந்த கோயிலில் உள்ள மணி முத்தீஸ்வரர் சந்நதிக்கு கடந்த 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடந் ததற்கான கல்வெட்டு உள்ளது. ஆனால் மூலவரான அகஸ்தீஸ்வரருக்கு எப்பொழுது குடமுழுக்கு நடந்தது என்ற குறிப்புகள் இல்லை. இது போன்ற குடமுழுக்குகள் நடைபெறாத கோயில்களை ஒவ்வொன்றாக கணக்கில் எடுத்து புனரமைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டு கணக்கில் குடமுழுக்கு நடைபெறாத கோயில்களுக்கு எல்லாம் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. 1,339 கோயில்களுக்கு நேற்று வரை குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. நேற்று மட்டும் 13 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த திருப்பணிகளை விரைவாக முடித்தால் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெறும்” என்றார்.

இந்நிகழ்வில் துணை மேயர் ப.சரவணன், இந்து சமய அறநிலையத் துறை தக்காரும், உதவி ஆணையருமான பி.ஜெயதேவி, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான நா.நந்தகுமார், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் கு.பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x