Published : 12 Feb 2018 01:28 PM
Last Updated : 12 Feb 2018 01:28 PM

இந்திராவுக்கு அடுத்து நான் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா: படத் திறப்புக்கு விஜயதாரணி திடீர் ஆதரவு

 ஜெயலலிதா படத் திறப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் உட்பட எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கையில்  காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி அரசியல் எப்போதும் உண்டு. யார் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் முன்னாள் தலைவர் கோஷ்டி தனியாக இயங்கும். திருநாவுக்கரசர் தலைவராக வந்தாலும் குஷ்பூ அவருக்கு எதிராகப் பேசியதும், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் மாநிலத்தில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை தன்னிச்சையாக எடுப்பார்கள். இது வாடிக்கையான நிகழ்வு. தற்போது காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கும் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

படத்திறப்பு விழாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என திருநாவுக்கரசர் அறிக்கை விட்டார். ஆனாலும் தலைமைச்செயலகம் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதை தாம் ஆதரிப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான நீங்கள் ஆதரிக்கிறீர்களே என்று கேட்டதற்கு, தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு ஆதரவு தருவதாகவும், கட்சி முடிவின் அடிப்படையில் தாம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, ஆனால் பெண் தலைவர் என்ற முறையில் அவரை மதிப்பதால் படத் திறப்பை தாம் ஆதரிப்பதாக தெரிவித்தார். இந்திரா காந்திக்கு பிறகு தாம் பெரிதும் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா என்று விஜயதாரணி கூறினார்.

பெண்கள் இந்த சமுதாயத்தில் சாதாரண பதவிக்கு கூட வரமுடியாத நிலையில் 3 முறை முதல்வராக சாதனை படைத்தவர் ஜெயலலிதா, பெண்ணாக பெண்களுக்கான பல கோரிக்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று கூறினார்.

விஜயதாரணியின் முடிவு காங்கிரஸ் கட்சிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இது குறித்து மேலிடத்துக்கு தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x