Published : 10 Feb 2018 10:30 AM
Last Updated : 10 Feb 2018 10:30 AM

ஜெ.தீபா வீட்டில் சோதனைக்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி: போலீஸ் விசாரணையின்போது தப்பியோட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று காலை வருமான வரித் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி வந்த நபர் போலீஸ் விசாரணையின்போது தப்பி ஓடினார்.

ஜெ.தீபாவின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 7 மணியளவிம் அவரது வீட்டுக்கு ஒருவர் வந்துள்ளார். தனது பெயர் நிதேஷ் குமார் எனக் கூறிய அவர் தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் வீட்டை சோதனையிட தன்னிடம் வாரண்ட் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஜெ.தீபாவின் வழக்கறிஞர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் அந்த நபர் கொண்டுவந்த வாரண்ட் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தபோது சந்தேகம் ஏற்படவே அவர் மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மாம்பலம் காவல் நிலையம் உதவி ஆணையர் செல்வம் தலைமையில் வந்த போலீஸார் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறிய நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த நபரைப் பிடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன், "இன்று காலை 7 மணியளவில் ஒரு நபர் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தினார். மேலும் தன்னிடம் சோதனைக்கான வாரண்ட் இருப்பதாகவும் கூறினார். அதிகாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் 4-5 அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொள்வதே வழக்கம் ஒரே ஒரு அதிகாரி என்றால் அவர் 10 மணிக்கு மேலேதான் வருவார் என்பதால் எனக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக எனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் விரைந்து வந்து விசாரித்தார். சந்தேகம் வலுக்கவே போலீஸில் தகவல் கொடுத்தோம். நாங்கள் சந்தேகித்ததுபோல் அவர் போலி அதிகாரி என்பது அவர் தப்பியோடியதிலிருந்து உறுதியாகிவிட்டது" என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெ.தீபா வீட்டில் கல் வீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x