Last Updated : 29 Jan, 2024 03:37 PM

16  

Published : 29 Jan 2024 03:37 PM
Last Updated : 29 Jan 2024 03:37 PM

குமுளியில் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகள் பணி நீக்கம்: இடுக்கி ஆட்சியர் அதிரடி

கேரள மாநிலம் குமுளியில் வாரிசுகள் இறுதிச்சடங்குக்கு வராததால் மூதாட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ்.(கோப்புப் படம்)

குமுளி: குமுளியில் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகளை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்ட எல்லை அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமுளி அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கிமீ. தொலைவில் அட்டப்பள்ளம் அருகே லட்சமேடு பகுதியில் வசித்து வந்தவர் அன்னக்குட்டி மேத்யூ(72). கணவர் இறந்த நிலையில் இவர் தனியே வசித்து வந்தார். இவரது மகன் சஜூமோன்(55), கேரளா கூட்டுறவு வங்கியில் வசூல் முகவராகவும், மகள் சிஜூ(52) ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராகவும் பணிபுரிந்தனர். திருமணமாகி தனித்தனியே அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னக்குட்டியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்ட இருவரும் தங்களது தாயை கவனிக்கவில்லை. இதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மயங்கியே கிடந்தார் அன்னக்குட்டி. தகவல் கொடுத்தும் இருவரும் வராததால் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி, உதவி ஆய்வாளர் மணி ஆகியோர் கடந்த வாரம் குமுளி அரசு மருத்துவமனையிலும், பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். இருப்பினும் கடந்த 24-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கு செய்யக்கூட வரவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் குமுளிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அட்டப்பள்ளத்தில் உள்ள அன்னக்குட்டியின் உடன் செயின்ட்தாமஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. போலீஸார் மற்றும் பொதுமக்கள் இறுதி சடங்குகளில் பங்கேற்றனர். தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையிலும், இறந்தபோதும் கூட பிள்ளைகள் வராதது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x