

வீட்டு வேலை மட்டுமே பெண்களுக்கானது என்கிற காலம் மாறிவிட்டது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டனர். வேலை சார்ந்து பல முன்னேற்றங்களை அடைந்துவிட்டாலும் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் பெண்களுக்கான உரிமை இன்றும் சில இடங்களில் மறுக்கப்படுகிறது. ஆண்களே செய்யத் தயங்கும் ஆதரவற்றோரின் உடல் நல்லடக்கப் பணிகளை கோவை, மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த ‘ஜீவ சாந்தி அறக்கட்டளை’ அர்ப்பணிப்புடன் செய்துவருகிறது.
கடந்த 13 ஆண்டுகளாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை இந்த அறக்கட்டளை நல்லடக்கம் செய்துள்ளது. இந்தச் சமூகப் பணியின் அடுத்த கட்டமாக தொடங்கப்பட்டதுதான் ‘வுமன் வாரியர்ஸ்’ அணி. ஆதரவற்ற பெண் சடலங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக மீட்டு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துவருகிறது இந்த அணி. எந்த நேரத்திலும் களத்துக்குச் செல்லத் தயாராக இருக்கும் இந்தப் பெண்கள் அணியை ஷாஹனாஸ் பர்வீன் ஒருங்கிணைக்கிறார்.
“ஆதரவற்ற நிலையில் உயிரிழப்ப வர்களில் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருக்கும். ஒரு பெண் இறந்த பின்பும் அவளது சடலத்தைச் சீரழிக்க முயலும் கயவர்கள் இங்கே ஏராளம். இதைத் தடுத்து அந்தச் சடலங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் பணிகளை ‘வுமன் வாரியர்ஸ்’ அணி செய்து வருகிறது. சிலர் முழு நேரமாகவும் 50 முதல் 60 பெண்கள் பகுதி நேரமாகவும் இந்த நல்லடக்கப் பணியில் ஈடுபட்டுவருகிறோம். பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் மத வேறுபாடின்றி இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த நேரமானாலும் எங்களுக்கு அழைப்பு வரும்பட்சத்தில் களத்துக்குச் சென்று பணியைத் தொடங்குவோம். அரசு மருத்துவ மனைகளில், சுகாதார நிலையங்களில், காவல் நிலையங்களில் எங்களது உதவி எண்களைப் பகிர்ந்திருக்கிறோம். உதவி தேவை என அவர்கள் அழைத்தால் போதும். அணியைத் திரட்டிக் களத்துக்குச் செல்வோம். ஒவ்வொரு முறையும் சவால் நிறைந்த இந்தப் பணியைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் மன நிறைவும் நிம்மதியும் அளப்பரியவை” என்கிறார் ஷாஹனாஸ்.
பெயர் அளவில் மாற்றம்
மனிதாபிமான அடிப்படை யில் மட்டும் நல்லடக்கப் பணிகளைச் செய்துவிட முடியாது. காவல் துறையின் உதவியுடன் விதிமுறைகளைப் பின்பற்றி எந்தச் சட்டச் சிக்கலும் இல்லாமல் ஒவ்வொரு சடலத்தையும் அடக்கம் செய்ய வேண்டிய பணியை அயராது தொடர்கின்றனர் இந்த வுமன் வாரியர்ஸ். இவர்களது சேவைக்குச் சமூகத்தில் பாராட்டு கிடைத்தாலும் பெயர் அளவில்தான் மாற்றம் அடைந்திருப்பதாகச் சொல்கிறார் ஷாஹனாஸ். “பெண்கள் அணியின் பணியை ஆண்கள் பலர் பாராட்டியுள்ளனர். ஆனால், தங்கள் வீட்டுப் பெண்கள் இந்த வேலையைச் செய்ய முன் வந்தால் பெரும்பாலும் அவர்கள் ஆதரிப்பதில்லை. எங்களைச் சந்தித்துச் சமூக சேவையில் ஈடுபட விரும்பும் பல பெண்கள் முன்வைக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை குடும்பம்தான். பல குடும்பங்கள் இன்றும் பெண்களின் விருப்பத்துக்குத் தடையாகத்தான் இருக்கின்றன” என்கிறார் அவர்.
மறக்க வேண்டிய விமர்சனங்கள்
அடக்கம் செய்யும்போது ஒளிப்படங்கள் எடுத்து அவற்றைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதற்கு விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர் இந்தப் பெண்கள். இது குறித்துப் பேசிய ஷாஹனாஸ், “வீட்டில் காய்கறி அழுகிப்போனால்கூட அதை வெறும் கையில் எடுத்துப்போடத் தயங்குவோம். காகிதம் அல்லது துணியைப் பயன்படுத்தியே தூக்கி எறிவோம். உயிர் பிரிந்த பின்பு சடலம் எந்த நிலையை அடையும் என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவு விரைவில் மீட்டு அடுத்த கட்டப் பணிகளைத் தொடர்கிறோமோ அதுவே நல்லது. புழுக்கள் சூழ்ந்திருக்கும் சடலத்தைச் சுத்தப்படுத்தி அடக்கம் செய்வது மிகச் சவாலானது. சில சடலங்களை அடையாளம்கூடக் காண முடியாது. இந்தக் காரணங்களுக்காக ஆதரவற்ற சடலத்தின் நல்லடக்கச் சேவையைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தின் உதவியால் பலரைச் சென்றடைய முடிகிறது. பலர் உதவி கேட்பதும், உதவ முன் வருவதும் சமூக வலைத்தளத்தைப் பார்த்துதான். ஒவ்வொரு சடலத்தை மீட்ட பின்பும் அதைப் பற்றிய குறிப்பை ஒளிப்படங்களுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்கிறோம். இதைப் பார்த்து நிறைய பேர் உதவ முன் வந்துள்ளனர். எதிர்மறை விமர்சனங்களை மறந்தும் கடந்தும் செல்கிறோம்” என்கிறார் ஷாஹனாஸ்.