Last Updated : 28 Jan, 2024 06:36 PM

 

Published : 28 Jan 2024 06:36 PM
Last Updated : 28 Jan 2024 06:36 PM

திருப்பத்தூர் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

மிகப் பழமையான அழகிய பாறை ஓவியம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், சோழனூர் அருகே கல்யாண முருகன் கோயில் அருகே கற்கால மக்கள் தீட்டிய அழகிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்மை நிறப்பாறை ஓவியங்கள் என தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது, ''திருப்பத்தூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் சோழனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கும், ஏலகிரி மலைச்சரிவிற்கும் இடையில் 'கல்யாண முருகன் கோயில்' அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குக் கிழக்குப் புறமாக உள்ள சிறிய குன்றின் பக்கவாட்டில் அழகிய பாறை ஓவியங்களை கண்டெடுத்தோம்.

அந்த குன்றானது சிறிய குகை போன்ற அமைப்பில் உள்ளது. இந்த குன்றானது ஒழுங்கற்ற சொர சொரப்பான மேல்புறத்தைக் கொண்டிருப்பதால், அந்த கால மக்கள் தீயினை மூட்டிப் பாறையின் மேல்புறத்தைப் பெயர்த்தெடுத்த பிறகு, அங்கு சமப்பகுதியை உருவாக்கி மிக நேர்த்தியாக ஓவியங்களைத் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 6 அடி அகலமும் 12 அடி நீளமும் கொண்ட மையப்பகுதியில் ஓவியங்கள் பரவலாக வரையப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்கவை என்ன வென்றால், 13 மனித உருவங்கள் இதில் காணப்படுகின்றன.

அனைவரது கைகளிலும் ஆயுதங்கள் காணப்படுகின்றன. விலங்குகளும், மனிதர்களும் இங்குள்ள ஓவியங்களில் 6 மனித உருவங்கள் ஒரு கையில் ஆயுதங்களோடு விலங்கின் மீது அமர்ந்த நிலையில் மறுகையில் விலங்கின் கழுத்துப் பகுதியை பற்றிய நிலையில் சண்டைக்குப் புறப்படுவது போல வரையப்பட்டுள்ளன. சில ஓவியங்கள் நீளமான பெரிய ஆயுதத்தை கையில் ஏந்திய நிலையிலும், அமர்ந்துள்ள விலங்கின் உருவமும் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளன.

படகு போன்ற உருவம்: இங்குள்ள ஓவியங்களில் ஒன்றில் மனித உருவம் ஒன்று கையில் ஆயுதங்களோடு ஒரு படகு போன்ற அமைப்பில் பயணிப்பது போல வரையப்பட்டுள்ளது. வளைந்த நிலையில் அடர்த்தியாக வரையப்படுள்ளது ஆய்வுக்குரியதாகும். இங்குள்ள ஓவியங்கள் விவரிக்கும் செய்தி என்ன வென்றால் இனக்குழுக்களுக்குள் எழும் சண்டை நிகழ்வினை விவரிப்பதாகக் கொள்ளலாம். மேலும் பெரிய அளவிலான வேட்டை நிகழ்வினை அறிவிப்பதாகவும் கருத இடமுண்டு. அந்த கால மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் ஒப்பற்ற சான்றாக இவை அமைந்துள்ளன.

மேலும், இங்கு இன்னும் பல ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ஏறத்தாழ 3500 – 4000 ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களும் அவற்றின் காலக்கணிப்பும், தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்கால ஓவியங்கள் காணக்கிடைகின்றன.

பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். அக்கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டுத் தமது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கலாம்.

அந்த கால மனிதர்களின் உள்ளத்தில் தோன்றும் அக உணர்வுகள், அவர்களது வாழ்வியல் அனுபங்களை வெளிப்படுத்தும் ஊடகமே இப்பாறை ஓவியங்களாகும். பெருங்கற்காலச் சின்னங்கள் மற்றும் பல பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் பொதுவாக குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன. மனித உருவ வடிவங்களின் அடிப்படைக் கூறுகளை எளிமைப்படுத்தி கோட்டுருவமாக தேவைக்குத் தகுந்தாற் போல் மனித உருவங்கள் வரையப்பட்டு வந்துள்ளன. இந்த குச்சி வடிவங்கள் கை, கால், உடல்களோடு வில், அம்பு, கேடயம் மற்றும் பிற ஆயுதங்களை தாங்கியிருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன.

உருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன், ஓவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. மேலும் வண்ணக் கலவையினைச் சுரண்டி எடுத்து வேதியியல் ஆய்வகங்களில் ஆய்வு செய்வதன் வாயிலாகவும் காலம் கணிக்கப்படுகின்றது. வெள்ளை நிறம், சுண்ணாம்பு கல் அல்லது வெள்ளைக் களிமண், வெப்பாலை என்ற மரத்தின் பால் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகின்றது. செங்காவி வண்ணம் செம்மண் மற்றும் இலைகளின் சாறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் பாறை ஓவியங்களில் அதிக அளவில் வெள்ளை நிறமும் அதற்கு அடுத்த நிலையில் செங்காவி நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொன்மையான ஓவியங்கள் செங்காவி நிறத்தில் வரையப்பட்டவை. தமிழகத்தின் வட பகுதிகளில் நிறைய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்ட போதும், திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்திரபுரம், செல்லியம்மன் கொட்டாய் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இதுவரை வெண்மை நிறப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பாறை ஓவியங்கள் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகும்.

இதனைப் பாதுகாப்பதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறியச் செய்வதும் நமது முக்கிய கடமையாகும். திருப்பத்தூர் மாவட்டம், சோழனூரில் கண்டறியப்பட்ட இந்த அழகிய பாறை ஓவியம் உள்ள குகைகளில் நெருப்பு மூட்டி கறி உணவுகள் சமைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களால் இங்குள்ள பாறை ஓவியங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆகவே மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையும் விரைவில் இப்பாறை ஓவியங்களைப் பாதுகாக்கவும், அவற்றை ஆவணப்படுத்த முன் வர வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x