Published : 28 Jan 2024 01:30 PM
Last Updated : 28 Jan 2024 01:30 PM

காவலர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பல்லடம் கோட்டம் - விழி பிதுங்கும் காவல் துறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழில் சார்ந்த துணை நகரமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்கள். விசைத்தறி, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்கள், நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தி சார்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயம் என துணை தொழில் நகரமாக தன்னை நாளுக்கு நாள் தகவமைத்துக் கொண்டே இருக்கிறது பல்லடம். தொழில் எந்தளவுக்கு கோலோச்சுகிறதோ, அந்தளவுக்கு அதிரடியாக அவ்வப்போது குற்றங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழகத்தையே உறைய வைத்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது. கள்ளக்கிணறு பகுதியில் குடிபோதையில் தொடங்கிய தகராறு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காவு வாங்கிய சம்பவம் வாழ் நாளெல்லாம் பலரால் மறக்க முடியாத ஒரு ஆழமான வடுவாக அப்பகுதியில் மாறியது. சமீபத்தில் காதலித்து மணந்த பெண்ணை பல்லடம் போலீஸார் சமாதானம் செய்து, பெற்றோர் குடும்பத்துடன் அனுப்பி வைக்க, அந்த இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இதில் பல்லடம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காம நாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரின் குற்றச்சாட்டை அலட்சியமாக கருதியதால், இன்றைக்கு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் தொழில் நகரில், குற்றங்களும் குறைந்தால் மட்டுமே தொடர்ந்து செழிப்பான வளர்ச்சியை எட்ட முடியும். குற்றங்கள் அதிகரிக்கும்பட்சத்தில் அந்த பகுதியில் இருந்து தொழில் வெளியேறுவது தவிர்க்க முடியாத ஒன்று.

பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.அண்ணா துரை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய சட்டப்பேரவைத் தொகுதி பல்லடம் தான். ஆண்கள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 579 , பெண்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 196 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தமாக 3 லட்சத்து 92ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடமும், சுற்றியுள்ள கிராமங்களும் விரிவடைந்து கொண்டே இருப்பதால், இன்றைக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கடந்த காலங்களை காட்டிலும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பல்லடம் காவல் எல்லை என்பது பரந்து விரிந்த பகுதியாகும். திருப்பூர் மாநகரின் நொச்சிபாளையம் பிரிவில் தொடங்கி காரணம்பேட்டை வரை உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் எல்லை வரை பல்லடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி தான். பல கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதியாகும். கணபதி பாளையம், கரைப்புதூர், ஆறு முத்தாம் பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் லட்சக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் வரை தொழிலுக்காக வந்து இந்த பகுதியில் தங்கி உள்ளனர். தங்குபவர்களின் ஆவணங்களை நிறுவனங்களும், வாடகைக்கு வீடு தருபவர்களும், அந்தந்த ஊராட்சிகளும் முறைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும், எங்கும் தஞ்சம் அடையலாம் என்பது தான் யதார்த்த சூழ்நிலை. தொடர்ந்து நாளுக்கு நாள் வளரும் பல்லடம் நகரில் போலீஸாரின் எண்ணிக்கை என்று பார்த்தால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த எண்ணிக்கை இருந்ததோ அதே அளவில் தான் தற்போதும் உள்ளது. 50 முதல் 70 போலீஸார் வரை இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பெரும்பாலும் நாள்தோறும் பணிகளை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். அதாவது விஐபி பாதுகாப்பு, கோயில்திருவிழா, அரசின் அன்றாட நிகழ்வுகள்,நீதிமன்ற வழக்கு பணிகள், போராட்டங்கள்என பல்வேறு பணிகள் போலீஸாருக்கு இருப்பதால், காவல் நிலைய பணிகளில் புகார்அளிக்க வருபவர்களின் புகார்களை உரிய முறையில் விசாரிப்பது தொடங்கி புகார்களை பெறுவது வரை பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

2 கூடுதல் காவல் நிலையங்கள்?: பருவாய், நொச்சிபாளையம், இச்சிபட்டி, கோடாங்கிபாளையம் செம்மிபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி காரணம்பேட்டையில் ஒரு காவல் நிலையமும்,கணபதி பாளையம், கரைப்புதூர், ஆறுமுத்தாம் பாளையம், அருள்புரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு அருள்புரத்தில் ஒரு காவல் நிலையமும் அமைத்து, போதிய போலீஸாரை நியமிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனை தமிழ்நாடு அரசும், முதல்வரும் செய்துதர வேண்டும். பல்லடம் மற்றும் காமநாயக்கன் பாளையம் ஆகிய இரு காவல் நிலையங்களிலும் தற்போது நேரடி ஆய்வாளர்கள் இல்லாத சூழ்நிலை தான் உள்ளது. குற்றங்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்லடம், காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டியது உடனடி தேவையாகும்.

அதேபோல் பல்லடம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் திறந்து வைத்தார். அதுவும் போதிய போலீஸார் இன்றி, பகல் நேரங்களிலேயே பூட்டிக் கிடக்கிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீஸார் பொது மக்களின் கண்ணில் பட்டாலே, குற்றங்கள் குறையும். அதேபோல் இரவு நேர ரோந்து பணியையும் தீவிரப் படுத்த வேண்டியது தற்போது தேவையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸார் கூறும் போது, “பல்லடம் காவல் எல்லை பரந்து விரிந்த பகுதிதான். ஆனால் அதற்கேற்ப போலீஸார் இல்லை. பணியில் இருப்பவர்களும் பல்வேறு மாற்று பணிகளுக்கு நியமிக்கப்படுவதால், தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருவது உண்மை. இதனால் தேவை என்கிறபோது கூட, விடுப்பு எடுக்க முடியாத நெருக்கடி காவலர்களுக்கு ஏற்படுகிறது” என்றனர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறும்போது, “அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் தொடர்பாக, அரசுக்குகருத்துரு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. பல்லடம் பகுதியில் போதிய போலீஸார் பணியில் உள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x