Published : 12 Feb 2018 12:07 PM
Last Updated : 12 Feb 2018 12:07 PM

சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக் கதை

தெய்வத்தின் அருள் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் ஒரு குட்டி கதை கூறினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதாவின் பெருமைகளை எடுத்துரைத்து புகழாரம் சூட்டினார். அப்போது அவர் ஒரு குட்டிக்கதை கூறினார்.

அந்தக் கதை பின்வருமாறு:

ஒரு சிறு கதை மூலம் தெய்வத்தின் அருள் எவ்வளவு முக்கியமானது என தெரிவிக்க விரும்புகிறேன்.

காந்தபுர நகரம் என்றொரு நகரம். "அரசர் இருப்பதால் எல்லாம் சுபிட்சமாக இருக்கிறது. அவர் இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது" என்று சொல்லும் ராஜபக்தன் ஒருவன் இருந்தான். அதே நேரத்தில், "எல்லாம் ஆண்டவர் அருள். அவன் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது." என்று சொல்லும் இறை பக்தனும் இருந்தான்.

ராஜவின் ஆட்சியா, ஆண்டவரின் ஆட்சியா என்பதில் இருவரும் வாக்குவாதம் செய்து கொள்வார்கள். மாறுவேடத்தில் வந்த ராஜா இவர்கள் இருவரையும் கவனித்தார்.

பின்னர், பூசணிக்காய் ஒன்றை எடுத்துக் குடைந்தார் ராஜா. அதற்குள் சில தங்க நாணயங்களையும், வைரங்களையும் போட்டார். அதனைக் குடைந்து எடுத்த இடம் தெரியாமல் மூடியும் விட்டார்.

ராஜ பக்தனைக் கூப்பிட்டு அதனை பரிசாகக் கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட ராஜ பக்தன், சிறிய பரிசை ராஜா கொடுத்திருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டே அதனைக் கடையில் விற்றுவிட்டான்.

அதே வீதி வழியாகக் ஆண்டவனின் பக்தன் சென்றான். பூசணிக்காயை பார்த்தான். கடையிலிருந்து அதனை 2 ரூபாய் விலை கொடுத்து வாங்கி, சிவனடியார்க்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பூசணிக்காயை நறுக்கச் சொன்னான்.

அவ்வாறு நறுக்கும்போது, அந்த பூசணிக்காய்க்கு உள்ளே 20 தங்க நாணயங்கள், சில வைரக் கற்கள் இருந்தன. ஆச்சர்யம் தாங்கவில்லை ஆண்டவ பக்தனுக்கு.

ஆண்டவணின் பக்தன் இது யாருடைய பொருள் என்று தெரியாததால் ராஜாவிடம் முறையிடச் சென்றான்.

அந்த நேரத்தில், ராஜாவும், அந்த ராஜ பக்தனை அழைத்து வர ஆள் அனுப்பினார். "உனக்குத் தங்கப் பூசணிக்காய் கொடுத்தேனே! என்ன செய்தாய்?" என்று கேட்டார்.

"சாதாரண பூசணிக்காய்! அதை ஒரு ரூபாய்க்கு விற்று விட்டேன்." என்றான் ராஜபக்தன். ராஜா வாயை மூடிக் கொண்டார்.

"ராஜாவே! நேற்று நான் கடைவீதிக்குப் போனேன். அங்கே ஒரு பூசணிக்காய் வாங்கினேன். அதில் 20 தங்க நாணயங்களும், சில வைரக் கற்களும் இருந்தன.

அதுபற்றி தங்களிடம் முறையிடவே அவற்றோடு வந்து இருக்கிறேன்" என்று கூறி அதனை ராஜா முன்பு வைத்தான் ஆண்டவ பக்தன்.

"இதை நீயே வைத்துக்கொள். ஆண்டவர் அருள் மிகப் பெரிது. என்று ராஜா கூறி ஆண்டவ பக்தனை ஆச்சரியப்பட வைத்தார். ராஜ பக்தனுக்கோ ஒன்றும் புரியவில்லை.""இந்த நாட்டு மக்களை நான் அரசாட்சி செய்யவில்லை. ஆண்டவன் ஆட்சி செய்கிறான்" என்று ராஜா சொல்லிவிட்டு, இருவருக்கும் உணவு படைத்து அனுப்பினான்.

ஆம்! இந்த நாட்டை, தமிழ்நாட்டை,  அம்மா என்கின்ற தெய்வம் எங்களை வழிநடத்தி ஆட்சி செய்கின்றது" இவ்வாறு முதல்வர் கதையைக் கூறி முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x