Last Updated : 27 Jan, 2024 06:02 PM

4  

Published : 27 Jan 2024 06:02 PM
Last Updated : 27 Jan 2024 06:02 PM

அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: கே.பி. முனுசாமி

கிருஷ்ணகிரி: அரசியல் வரலாறு தெரியாமல் பேசி வரும் அண்ணாமலையை, பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி. முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில், அண்ணா தொழிற்சங்க அலுவலக திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்த கே.பி. முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின்பு, அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தெரிவிக்கிறோம். தமிழகத்தில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தோ்தல் முடிந்த பின்பு தமிழக மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும்.

தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது, அவர் மாணவராக இருந்திருப்பார். வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த பாஜகவை, 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, தென் மாநிலத்திற்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா. அப்போதைய பாஜக தலைவர் வாஜ்பாய், அத்வானி இருவரையும், சென்னை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற அந்த அமைப்பு நாங்கள் உருவாக்கிக் கொடுத்தது என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னை முன்னிலைப்படுத்தி, பாஜகவை பின்னுக்குத்தள்ளி அண்ணாமலை பேசி வருகிறார். அவருக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. வாஜ்பாய் தலைமையில் பாஜக இருந்தபோது மோடி ஒரு தொண்டராகவோ அல்லது ஒரு மாநில தலைவராகவோ இருந்திருப்பார். வாஜ்பாயை வாழ்த்தி பேசி தான், மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. மோடியை மட்டுமே புகழ்ந்து பேசி ஆதாயம் தேடி வருகிறார். அண்ணாமலை பாஜக தலைவர்களை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்எல்ஏவின் மகனும், மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஏதோ ஒரு சக்தி தடுத்துள்ளது. மற்றவர்களுக்காக ஆட்சி செய்வதால் தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனை கண்டித்து தான் அதிமுக சார்பில் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ராமர் கோயிலை பொருத்தவரை ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது. அதற்குரிய தண்டனையை அந்த ராமபிரான் வழங்குவார். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x