Published : 26 Jan 2024 02:45 PM
Last Updated : 26 Jan 2024 02:45 PM

‘பிரிவினை கொள்கைகளைத் தகர்த்தெறியட்டும்’' - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி 

75வது குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

சென்னை: "இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய நோக்கைத் தழுவி, பிரிவினைக் கொள்கைகளைத் தகர்த்தெறியட்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "நமது இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக விளங்கும் பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீதான நமது உறுதிப்பாட்டினைப் புதுப்பித்துக் கொள்வோம். இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய நோக்கைத் தழுவி, பிரிவினைக் கொள்கைகளைத் தகர்த்தெறியட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

முன்னதாக, 7.50 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடனும், அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, ராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், அரசுத் துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 21 அணிவகுப்பு வாகனங்கள் வலம் வந்தன.

இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த பூர்ணம் அம்மாள், தனது மகள் நினைவாக தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக அளித்தார். அவருக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x