Last Updated : 26 Jan, 2024 02:47 PM

2  

Published : 26 Jan 2024 02:47 PM
Last Updated : 26 Jan 2024 02:47 PM

‘சமூக நீதி’ திமுக அரசில் பட்டியலின மக்கள் நிலை: விசிக ‘அணுகுமுறை’ எப்படி?

இந்தியாவில் சமூக நீதி, சமத்துவத் தத்துவங்களை அதிகம் பேசுகின்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. குறிப்பாக, பொங்கல் வாழ்த்தில் கூட ‘சமத்துவப் பொங்கல்’ எனக் குறிப்பிடுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2 ஆண்டுகளாக, பட்டியலின மக்கள் தொடர்பான பிரச்சினைகளும், திமுக அதனைக் கையாண்ட விதமும் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. திமுக சறுக்கிய இடம் எது? தேர்தலில் சந்திக்கப் போகும் சவால்கள் என்னென்ன? திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

திமுக ஆட்சியைப் பிடித்த பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 24 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. தனியார் அமைப்பான ‘எவிடன்ஸ்’ பெற்ற ஆர்.டி.ஐ. விவரங்கள் படி, “கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் தொடங்கி, ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு வரை, அதிகபட்சமாக மதுரை – 115, தேனி – 98, திருநெல்வேலி – 90, புதுக்கோட்டை – 88, விருதுநகர் – 68 , தென்காசி, தாஞ்சாவூர், சிவகங்கையில் தலா 58, என்ற எண்ணிக்கையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றில், ‘முற்போக்கு மாநிலம்’ எனச் சொல்லும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய முக்கிய வன்கொடுமை குற்ற வழக்குகளைப் பார்க்கலாம்.

‘வேங்கைவயல்’ குடிநீர் தொட்டியில் மலம்: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில், அடையாளம் தெரியாத விஷமிகளால் மலம் கலக்கப்பட்டது. அந்நீரைப் பருகிய சிறுவர், சிறுமிகள் உட்பட சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இது குறித்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குப் பதியப்பட்டது. ஓராண்டு கடந்த பின்பும் குற்றவாளி யார் என்பது இன்னும் கண்டறியப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனையில் 31 பேரின் டிஎன்ஏவும், ஏற்கெனவே குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவு மாதிரியின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை தோல்வி அடைந்துள்ளதால், விசாரணை எந்த இடத்தில் தொடங்கியதோ, அதே இடத்துக்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் குற்றமிழைத்தவர்களை விடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதால்தான், அது தோல்வி அடைந்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாங்குநேரி மாணவருக்கு வெட்டு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி இரவு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 17 வயதுள்ள பட்டியலின மாணவரை, அவருடன் பள்ளியில் பயின்ற, ‘ஆதிக்கச் சாதி’யைச் சேர்ந்த 6 பேர் வீடு புகுந்து அரிவாளால் மிகக் கொடூரமாக வெட்டினர். இதைத் தடுக்க வந்த மாணவரின் தங்கைக்கும் வெட்டு விழுந்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேல்பாதி கோவில் நுழைவு: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி, பட்டியலின சமூகத்தினருக்கும் - இடைநிலை சாதியினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையில் சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில், பொது அமைதியைச் சீர்குலைக்காமல் இருக்க கோயிலைப் பூட்டி, மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்தது. பட்டியலின மக்களைக் கொண்டு, கோவில் நுழைவுப் போராட்டம் நடத்திய தமிழ்நாட்டில், இப்படியொரு நிலையா எனக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது திமுக அரசு.

பட்டுக்கோட்டை ஆணவக் கொலை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீன் என்பவரும் இடைநிலை சாதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் காதலித்து கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தனர். இது தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.

சமீபத்தில், திமுக பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இதுவும் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இப்படியாக, அதிகப்படியான விமர்சனத்திற்கு உள்ளான வழக்குகளின் விவரங்களை மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், தமிழகத்தில் மிகக் கொடூரமான ஆணவக் கொலை மற்றும் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.

சாதிய வன்கொடுமைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வரும் எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிரிடம் பேசினோம். அவர், ‘‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும்’ என இருந்த விதியை, கடந்த ஆண்டு பாஜக அரசு திருத்தியது. அதில், சந்தேகிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்யலாம். இதைத் திமுக அரசு கடுமையாக விமர்சித்தது. ஆனால், தற்போது அதே திமுக அரசு, வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்வது முரணாகவுள்ளது.

அதேபோல், ‘பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கக் கூடாது’ என, எங்களைப் போன்ற அமைப்புகளை ஊருக்குள் விடுவதில்லை. ‘பாதிக்கப்பட்ட ஊரையே’ திமுக அரசு சிறையில் வைத்துள்ளதோ என்னும் சந்தேகம் எழுகிறது.

‘‘தஞ்சம் கேட்டு காவல் நிலையத்துக்கு வந்த ஜோடிகளை பல்லடம் போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தது தவறு. அதன்பின், ஊர் மக்களே பார்க்கும்படிதான் அந்த ஆணவக் கொலை நடந்துள்ளது. பெண்ணின் எலும்பு கூடக் கிடைக்கக் கூடாது என, எரித்துச் சாம்பலாக்கியுள்ளனர். இது நடந்து 4 நாட்களுக்குப் பிறகுதான் போலீஸ் ஊருக்குள் போகிறது.

இதெல்லாம் நிர்வாக சீர்கேடு இல்லையா? ‘திமுக அரசுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது’ எனச் சொல்லிவிட முடியுமா? அதேபோல், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சாதி ஆணவக் கொலைகளுக்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை” என்றார்.

நாங்குநேரி சம்பவத்துக்கு அரசு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. அது போதுமானதா? என்னும் கேள்வி எழுகிறது. பொதுவாக, ‘வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும்’ என்பதுதான் வன்கொடுமை சட்டத்தில் இருக்கும் ஒரு விதி. அதைத்தான் அரசு அறிவித்தது. அதைத் தாண்டி கூடுதலாக அரசு நினைத்தால் நிதி அறிவித்திருக்கலாம்.

ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு, திருப்பூரில் குடும்பத் தகராறில் கொல்லப்பட்டவர்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் தரும் அரசு, சாதிய வன்கொடுமைக்குள்ளான மாணவனின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் நிதி அளிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

மேலும், இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக அரசு உபயோகிப்பதும் கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் ஆதிதிராவிட நலத் துறைக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி செலவழிக்காமல் திரும்பி அனுப்பப்பட்டதாகவும், அதே நிதி, மாற்றுத் திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.‘பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைத் திமுக அரசு அளிப்பதில்லை. பட்டியலின மக்களின் பிரச்னைகளைக் கிள்ளுக் கீரையாகத் தான் பார்க்கிறது’ எனப் புலம்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இது ஒரு நாளில் நடக்கும் மாற்றமில்லை.கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக - பாஜக மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனை ஆமோதிக்கும் பலரும் கூட, திமுக பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை வழக்குகளைக் கையாளும் விதத்தை விமர்சிக்காமல் இல்லை.

எடுத்துக்காட்டாக, காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் குடிநீர் தொட்டியில், மலம் கலந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பள்ளிக்கு சென்றதும் காட்சியே மாற்றியது. குடிநீர்த் தொட்டியில், முட்டை கலந்திருந்ததாகக் கூறி, அவசர அவசரமாகத் தொடியை இடித்துத் தள்ளினார். முறையாக விசாரணை நடப்பதற்கு முன்பாக, தொட்டி இடிக்கப்பட்டதிலிருந்து திமுக அரசின் நீர்வாக அவலத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

வேங்கைவயலில் முறையான விசாரணை நடத்தியிருந்தால் இப்படியான சம்பவமே தொடர்ந்திருக்காது. அந்த ஒற்றைச் சம்பவம் பலருக்கும் தைரியத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர் செயல்பாட்டாளர்கள்.

என்ன செய்கிறது விசிக? - ‘பட்டியலின மக்களின் நலன் காக்கத் தொடங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்த வழக்குகளில் தீவிரமாகக் களமிறங்கவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், எதிர்ப்புக் குரலைக் கூடப் பதிவு செய்யவில்லை’ என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால், பட்டியலின மக்கள் பிரச்னைகளில் திமுகவின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி இருப்பதாகக் கூறிக் கொள்ளும் விசிக., பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்கும் பொருட்டே, திமுகவுடன் கூட்டணியில் நீடிப்பதாகக் கூறுகிறது. ஆனால், இதில் விசிகவின் சுயலாபத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பட்டியலின பிரச்னையைத் திமுக கையாண்ட விதத்தைக் காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து வெளியேறுவது போல் ‘ஸ்டண்ட்’ செய்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளை அதிகரிக்கவும், சொந்த கட்சிச் சின்னத்தில் நிற்பதும் விசிகவின் நோக்கமாக இருக்கலாம்.

திமுக பட்டியலின மக்கள் பிரச்னையில் தொடர்ந்து சொதப்புவதை மக்கள் மத்தியில் முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தீவிரமாகக் காய் நகர்த்தினால் திமுகவிற்கு அது பெறும் சறுக்கலை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் மக்கள், எதிர்க்கட்சிக்களுக்கு தங்கள் வாக்கைச் செலுத்தவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் வெறும் 4 சதவீதம் தான். தமிழ்நாட்டு வாக்காளர்களில், 20% பேர் பட்டியலின மக்கள் தான். எனவே, திமுக மீதான இந்த அதிருப்தி, நாளை வாக்குகளை எப்படி வேண்டுமானாலும் சிதறச் செய்யும் என, தமிழ்நாட்டு அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது அரசியல். அப்படி சட்டென்று ’புல் ஸ்டாப்’ வைத்துவிட முடியாது. தேர்தல் நெருங்கும் வரை, கள நிலவரமும் மக்கள் மனதும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x