Published : 26 Jan 2024 05:42 AM
Last Updated : 26 Jan 2024 05:42 AM

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு: தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

தேர்தல் ஆணையம் சார்பில், தேசிய வாக்காளர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், பள்ளி, கல்லூரி அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார். உடன், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: புதிய வழிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி தேசிய வாக்காளர் தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமை தாங்கி, தமிழகம் முழுவதும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை சிறப்பாக செய்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட ஓவியம், கடிதம் எழுதுதல், பாடுதல்,விநாடி- வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் குடவோலை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது உத்திரமேரூர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற குறிப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். அவற்றில்பழங்கால மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையை கடைப்பிடித்துள்ளனர்.

வாக்களிப்போர் எண்ணிக்கை: இன்று உலக நாடுகள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்திய ஜனநாயகம் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதற்கு வாக்காளர்களின் பங்கு அதிகம் தேவை. நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தலில், தேசிய அளவில் தமிழகத்தில் வாக்களிப்போரின் எண்ணிக்கை 74 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரியைவிட இது அதிகம்தான். ஆனாலும், இது திருப்திகரமானதாக இல்லை.

கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல், வாக்களிப்பதிலும் தமிழகத்தின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்.அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் குறித்த விழிப்புணர்வில் மாணவர்கள், பொதுமக்களின் பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, தேர்தல் ஆணையம் புதிய வழிகளை யோசிக்க வேண்டும். தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையத்துடன், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x