Published : 25 Jan 2024 08:16 PM
Last Updated : 25 Jan 2024 08:16 PM

“பாஜக தற்காத்துக் கொள்ள மதத்தை கையில் எடுக்கிறது” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னையில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்

சென்னை: "பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவின் தோல்விகளை, அவர்களின் தமிழ்மொழி விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம். இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இண்டியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும்" என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: "1965 மொழிப்போருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, அந்த மொழிப்போரின் இலக்குக்குச் செயல்வடிவம் கொடுத்தது. முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் 1968-ம் ஆண்டு ஜனவரி 23 அன்று இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இரண்டு நாள் கழித்து ஜனவரி 25-ல் சென்னை நேப்பியர் பூங்காவில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அண்ணா, 'என்னால் ஆனதைச் செய்துவிட்டேன், இனி மைய அரசு தன்னால் ஆனதைச் செய்து கொள்ளட்டும். நான் குறுக்கே நிற்கப்போவதில்லை. தியாகத்தைச் செய்ய நாங்கள் தயார்!” என்று ஆட்சியைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் பேசினார். அப்படிப்பட்ட மரபுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்மொழியைப் புறக்கணித்து இந்தி மொழியைத் திணிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. நாமும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். கடந்த 9-9-2022 அன்று, அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவரான அமித்ஷா குடியரசுத் தலைவரிடம் ஒரு அறிக்கையை கொடுத்தார். அதில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அந்த மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கும் எதிரான பரிந்துரைகள் இருந்தது.உடனே அக்டோபர் 18-ம் நாள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதைத் துணிச்சலாக எதிர்த்து தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தினோம்.

இந்தியாவை ஆளும் பாஜக அரசானது இந்திமொழியைத் திணிப்பதற்குக் காரணம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான். பாஜகவுக்கு அதிகம் வாக்களிப்பது யார்? வடமாநில மக்கள். குறைந்தபட்சம், இந்தி பேசும் வடமாநில மக்களுக்காவது எந்த நன்மையாவது செய்திருக்கிறார்களா? கரோனா காலத்தில் திடீர் என்று ஊரடங்கு போடப்பட்டதால் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்குக் கூட இந்தி பேசும் மக்களுக்குப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தராமல், பல நூறு கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து தங்களின் ஊருக்குப் போன கொடுமையைப் பார்த்து நாம் கண்ணீர் விட்டோம். பலர் தண்டவாளத்தில் நசுங்கி இறந்தார்கள். அப்படி என்றால், கரோனாவை விடக் கொடியவர்கள் யார் என்றால் பாஜக அரசுதான். சாரை சாரையாக நடந்து சென்ற இந்தி மக்களுக்கு நீங்கள் காட்டிய இரக்கம் இதுதானா? அந்த மக்களை, இப்போது ராமர் கோயிலைக் காண்பித்து திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் நான்கைந்து நாட்களாக ஒரு காணொளி பரவி வருகிறது. 'எங்களுக்கு படிப்புதான் தேவை' என்று இந்தியில் பேசும் ஒரு சிறுவனின் பழைய காணொளி அது. இந்த விழிப்புணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்று பாஜக நினைக்கிறது. மக்களை ஏமாற்றும் பாஜகவின் அரசியலை வடமாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. இந்த முறை வட மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறமுடியாது. அதுதான் உண்மை.

லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சேலம் இளைஞர் அணி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் மிக முக்கியமான தீர்மானம் - ''இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம்'' என்பது. இந்தப் பரப்புரையை எல்லோரும் செய்தாக வேண்டும். இது இளைஞரணியினருக்கான உறுதிமொழி மட்டுமல்ல, எல்லோரின் உறுதிமொழியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவின் தோல்விகளை, அவர்களின் தமிழ்மொழி விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்.

பாஜகவின் தோல்விகளை நான் பட்டியலிட வேண்டும் என்றால், 2014-இல் 414 ரூபாயாக இருந்த சமையல் சிலிண்டர் விலை இப்போது 918 ரூபாய். 72 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது 102 ரூபாய். 55 ரூபாயாக இருந்த டீசல் இப்போது 94 ரூபாய். இப்படி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இவ்வளவு நாட்களாக பாஜக கூடவே இருந்து அவர்களின் மக்கள்விரோதச் செயல்கள் எல்லாவற்றுக்கும் ”ஆமா சாமி” போட்டவர்தான் பழனிசாமி. பாஜகவின் பாதம்தாங்கியாக பவனி வந்தார். தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியில் அடகு வைத்தார். தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதிலேயே நான்கு ஆண்டுகளை ஓட்டிவிட்டார்.

பாஜகவோடு கூட்டணி வைத்துக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்தார். நீட் தேர்வைத் தமிழகத்துக்குள் நுழையவிட்டார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஒரே நாளில் யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டத்தை ஆதரித்தார். ஜிஎஸ்டியை எதிர்க்காமல் மாநில நிதிநிலையை பாதாளத்துக்குத் தள்ளினார். தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தித் திணிப்புக்கு உதவினார். அதனால்தான் மக்களால் தோற்கடிக்கவும் பட்டார்.

பாஜகவோடு சேர்ந்து சிறுபான்மைச் சகோதரர்களுக்கு அவரும் அதிமுகவும் செய்த துரோகத்தை மறைத்து இப்போது ஒரு நாடகம் போடுகிறார். அதைத்தான் தம்பி தயாநிதி சொன்னார். ஆனால் சிறுபான்மையின மக்கள் அவர் செய்த துரோகங்களை மறக்கவில்லை, மறக்கவும் மாட்டார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் எல்லா இடத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இண்டியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும். அத்தகைய ஆட்சியில் எல்லா இனம் - மொழி - மத மக்களும் சம உரிமை கொண்டவர்களாக வாழ்வார்கள், வாழ வைப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின்மீது உறுதி ஏற்போம். வென்று காட்டுவோம். தன்னை ஈந்து தமிழைக் காக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி விடைபெறுகிறேன்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x