

திருப்பூர் செய்தியாளர் மீதான தாக்குதல்: முதல்வர் கண்டனம்: திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், " இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது"என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்: கர்நாடகாவில் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதன்மூலம், தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இத்திட்டம் தமிழ்நாட்டுக்கு வருவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏ மீதான வழக்குப் பதிவுக்கு இபிஎஸ் கண்டனம்: “அதிகாரம் நிரந்தரமானது என்ற நினைப்புடன் திமுகவினரின் சொல்படி செயல்படக்கூடிய ஒருசில அரசு அதிகாரிகள் மற்றும் ஒருசில காவல் துறையினர், சட்டப்படி இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு நியாயமாக, சட்டத்தின்பால் நேர்மையாக பணிபுரிய வேண்டும். மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட 20 பேர் மீது காவல் துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள்: தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை தென்மாவட்டங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. புதன்கிழமை தென்மாவட்டங்களில் இருந்து கிளம்பும்போது கோயம்பேடு செல்லும் என்று கூறப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலையில் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ விலை மீண்டும் உயர்கிறது: தமிழகத்தில் மீண்டும் ‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் உயரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திரிணமூல் காங். உடன் விரைவில் தீர்வு: காங்கிரஸ்: “காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் இன்றியமையாதவர்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“மேற்கு வங்க கூட்டணி விரிசலுக்கு ஆதிர் ரஞ்சனே காரணம்!”: “மேற்கு வங்கத்தில் கூட்டணி அமையாததற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம்” என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், "இண்டியா கூட்டணியின் பெயரைக் கெடுக்க விரும்புபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் பாஜகவினரும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும்தான் அடிக்கடி கூட்டணிக்கு எதிராக பேசி வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை கணிசமான இடங்களில் தோற்கடித்தால், அதன்பின்னர் கூட்டணியில் அங்கம் வகிப்போம். அரசியல் சாசனத்துக்காக போராடும் கூட்டணியின் அங்கமாக நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வியாழக்கிழமை காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
பெற்றோரின் அதீத நம்பிக்கையால் பறிபோன சிறுவன் உயிர்!: டெல்லியில் இருந்து புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட தங்களது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு, ஹரித்துவாருக்கு ஒரு பெற்றோர் வந்துள்ளனர். இவர்கள் கங்கையில் புனித நீராடினால் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில் நோயுற்ற சிறுவனை திரும்பத் திரும்ப கங்கை நதியில் மூழ்கச் செய்துள்ளனர். இந்த செயல் சிறுவனின் உயிரைப் பறித்துவிட்டது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து: 246 ரன்களில் ஆல் அவுட்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமைத் தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அக்ஸர் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.