‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ விலை மீண்டும் உயர்கிறது - பிப்.1 முதல் அமல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை: தமிழகத்தில் மீண்டும் ‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் உயரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் புதிய வீடு வாங்குதல் பணிகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம் சாண்ட், பி சாண்ட் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமான தொழிலை நம்பி செயல்படும் கிரஷர் மற்றும் குவாரிகள் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தமிழக அரசின் கனிமவளத் துறை ராயல்டி கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணமும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் கட்டுமானத் துறைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய கிரஷர் மற்றும் குவாரிகளில் தயாரிக்கப்படும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் ரூ.3,000 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம் சாண்ட் ரூ.4,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் ரூ.5,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கனிம பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தொழில் அமைப்பான ‘கிரடாய்’ கோவை துணை தலைவர் அபிஷேக் கூறும்போது, “ஏற்கெனவே தமிழக அரசு பதிவு கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் வரை உயரும். தமிழக அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in