Published : 25 Jan 2024 01:41 PM
Last Updated : 25 Jan 2024 01:41 PM

“அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மூச்சுத் திணறல்” -  விஜயகாந்தின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த பிரேமலதா

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவ படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறைந்த விஜயகாந்தின் இறுதி நாட்கள் எப்படி இருந்தது என்பது பற்றியும், அவரின் உடலை வைக்க சென்னை தீவு திடல் எப்படி கிடைத்தது என்பது பற்றியும் கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார்.

டிச.25ம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத் தான் விஜயகாந்த்தை மருத்துவமனை அழைத்துச் சென்றேன். அன்றைய தினம் கிறிஸ்துமஸ், எனவே மருத்துவர்கள் விடுமுறை என்பதால் மறுநாள் 26ம் தேதி அழைத்து வர சொன்னார்கள். பொதுவாகவே எனக்கு 8 என்றால் பயம். என்னுடைய செண்டிமெண்ட் அப்படி. 26ன் கூட்டுத்தொகை எட்டு என்பதால் 26ம் தேதி கேப்டனை மருத்துவமனை அழைத்துச் செல்ல தயக்கம் காண்பித்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என என்னை வற்புறுத்தி 26ம் தேதியே மருத்துவர்கள் அழைத்து வரச் சொன்னார்கள்.

2014ல் இருந்து விஜயகாந்த் இறப்பு வரை எத்தனை முறை உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளேன். அந்த நம்பிக்கையில் 26ம் தேதியும் மருத்துவமனையில் அனுமதித்தோம். வழக்கமான பரிசோதனைகளுக்கு மத்தியில் கரோனா சோதனையும் நடந்தது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினோம். அந்த சமயங்களில் நன்றாக இருந்தார். டிச.28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, அவரின் கையைப்பிடித்து கொண்டு, "உங்களுக்கு ஏதும் ஆகாது, நிச்சயம் வீட்டுக்கு போய்விடுவோம். தைரியமாக இருங்கள்" என்று சொன்னேன். நான் சொல்வதை அவர் கேட்டாலும் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார்.

மூச்சு திணறல் ஆரம்பித்த உடனே, "இந்த முறை மிகவும் சிரமம்" என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். உறவினர்களுக்கு அறிவிக்கவும் மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில், விஜயகாந்த்தின் உயிர் பிரிந்துவிட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்துக்கு நடந்தது. விஜயகாந்த் இறந்தபிறகு இன்றுதான் கட்சியினரை சந்திப்பதால் இதனை உங்களிடம் தெரிவிக்கிறேன்.

விஜயகாந்த் இறந்தபிறகு அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலை தான் முதலில் கேட்டோம். ஆனால், அது முடியாது என்று கூறிவிட்டார்கள். ராஜாஜி ஹாலை தவிர்த்து வேறு இடங்களை கேட்க சொன்னபோது சென்னை தீவுத்திடலை கேட்டோம். அடுத்த 10வது நிமிடத்தில் சொன்னபடி தீவுத்திடலுக்கு சரி என அரசு தரப்பில் சொன்னார்கள். பத்திரிகையாளர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்டவரை புரிந்துகொள்ளாமல் இருக்கும்போது தான் அவர் மிகவும் டென்ஷனாகி விட்டார். இதுதான் விஜயகாந்த்துக்கும் ஊடகத்துக்கும் இடையே நடந்தது.

இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை விஜயகாந்தின் கோவிலாக அவரது நினைவிடம் உருவாக்கப்படும். அதேபோல் இங்கு அளிக்கப்படும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை இதே இடத்தில் தொடரும். விஜயகாந்தின் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டார்கள். அவர்களது விருப்பப்படி, ''வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதானம் ட்ரஸ்ட்" என்று விஜயகாந்த் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன்.

விஜயகாந்த் உடல்நலம் குன்றிய இந்த 10 ஆண்டுகளிலும் எனது முழுக்கவனமும் விஜயகாந்த்தை சுற்றியே இருக்கும். ஒருநாள் கூட இந்த ஆண்டுகளில் அவரை தனியாக விட்டதில்லை. ஆனால், இந்த ஒருமாதம் அவரை விட்டு எப்படியாக தனியாக இருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் விஜயகாந்துக்கே மனைவியாக வாழ ஆசைப்படுகிறேன். நிறைய சூழ்ச்சிகளில் விஜயகாந்த் மாட்டியதால் தான் தேமுதிகவின் பாதை எப்படியோ சென்றுவிட்டது. தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் எனது வாழ்க்கை." இவ்வாறு உருக்கமாக பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x