Published : 06 Feb 2018 07:36 AM
Last Updated : 06 Feb 2018 07:36 AM

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பல்கலை. ஊழலில் ஈடுபட்டவர்களை திமுக சிறைக்கு அனுப்பும்: ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் விரைவில் நடைபெறும் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பல்கலைக் கழகங்கள் தொடர்பான ஊழல்களில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தருமபுரியில் நேற்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

1967-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் சீர்திருத்த திருமணங்கள் செல்லுபடியாகாது. அண்ணா முதலில் தமிழக முதல்வர் ஆன பிறகுதான் சீர்திருத்த திருமணங்கள் செல்லுபடியாகும் என சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்தில் சீர்திருத்த திருமணங்கள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் தமிழக அரசே இதற்கு காரணம். தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றப்பட்டால் திமுக சார்பில் கடும் போராட்டங்கள் நடத்தப்படும்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர், பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்று கைதாகி இருக்கிறார். இந்த சம்பவம், ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் பல்கலைக் கழகங்களையும் ஊழல் புரிய வைத்துள்ளனர். இந்த துறையுடன் தொடர்புடைய, உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு சேர வேண்டிய கமிஷன் சென்று சேராததால் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் நலனைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு நாள் நெருங்கி வருகிறது. விரைவில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பல்கலைக் கழகங்களில் நடந்த ஊழல்கள், அதற்கு காரணமானவர்கள் என அனைவரும் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர். எனவே, அனைவரும் ஆட்சி மாற்றம் ஏற்பட தயாராகுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x