Last Updated : 24 Jan, 2024 02:42 PM

4  

Published : 24 Jan 2024 02:42 PM
Last Updated : 24 Jan 2024 02:42 PM

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலை பெற ரூ.2,000, ரூ.3,000 வசூல் - சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அவலம்

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்த உடலை பெறுவதற்கு ரூ.2,000, ரூ.3,000 கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அந்த சோகத்திலும் கண்ணீருடன் கடன் வாங்கியாவது பணத்தை கொடுத்து ஏழை மக்கள் உடலை பெற்று செல்கின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் கடந்த மாதம் உயிரிழந்த குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அங்கு பணியாற்றி வந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்கூடத்தில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை, பணம் கொடுக்காமல் பெற்று செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக திகழும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 42 துறைகளும், 3,150 படுக்கை வசதிகளும் உள்ளன. உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் சிகிச்சை பெறுகின்றனர். பல் துறை மருத்துவ நிபுணர் குழுவும், உயர் கட்டமைப்பும் இருப்பதால் தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பலர் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவ குழுவினரின் தீவிர சிகிச்சையும் பலன் அளிக்காமல் சில நேரங்களில் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். அப்படி உயிரிழப்பவர்களில் காவல் துறை வழக்கு தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களின் உடல்கள் கட்டாயம் பிரேதப் பரிசோதனை செய்த பிறகே உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். சிலர் தங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரின் இறந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பெற்று கொள்கின்றனர்.

அப்படி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை பெற்றுக்கொள்வதற்கு வரும் உறவினர்களிடம், அங்கு பணியாற்றுபவர்கள் தொடர்ந்து பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது ஸ்ட்ரெச்சர், வீல் சேரில் பரிசோதனைக்கு அழைத்து செல்லும் ஊழியர்களுக்கு பணம், இறந்த பிறகு மருத்துவமனைக்கு வரும் போலீஸாருக்கு பணம், கடைசியாக பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை பெறுவதற்கும் பணம் கேட்கப்படுவதால், அந்த சோகத்திலும் கண்ணீருடன் அவர்கள் கேட்கும் பணத்தை கடன் வாங்கியாவது கொடுத்துவிட்டு உடலை பெற்று செல்கின்றனர் ஏழை மக்கள்.

பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் உடலை கட்டுவதற்கான துணி, வாசனை திரவியம் மற்றும் உடல் உறுப்புகளை எடுத்து வைக்க கண்ணாடி பாட்டில்கள் என அனைத்தும் அரசு இலவசமாக வழங்குகிறது. பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாதம் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வளவுக்கு பிறகும் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்று சென்றவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் கொடுக்காமல் உடலை வாங்க முடியாது. பணம் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். விரைவாக உடலை பெற்று வீட்டுக்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும், அவர்கள் கேட்கும் கொடுக்க வேண்டியுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x