Published : 08 Feb 2018 05:06 PM
Last Updated : 08 Feb 2018 05:06 PM

ரவுடிகள் கூடாரமாகிறதா தமிழகம்?- சரிப்படுத்த வேண்டிய இடத்தில் காவல்துறை சிஸ்டம்

தமிழகம் முழுவதும் ரவுடிகளின் கூடாரமாகிறதா? என நேற்றைய சம்பவத்தின் மூலம் கேள்வி எழுந்துள்ளது. இதற்காக உள்ள பிரத்யோகத் துறைகளின் செயல்பாட்டில் மாற்றம் வேண்டுமா? காவல்துறை சிஸ்டம் சரியாக உள்ளதா? என கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னையில் ஒரு காலத்தில் பிரபல தாதாக்கள் வலம் வந்தனர். கட்சி சார்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என அவர்கள் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் உள்ள தாதாக்கள் மற்ற மாவட்ட தாதாக்களுடன் கைகோத்துப் பணி முடிக்கும் நிலையில் முன்னேறினர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வரிசையாக தெலுங்கு மசாலாப் படம் போல் காரில் வலம் வந்த ரவுடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆட்கடத்தல் உள்ளிட்ட செயல்களில் இறங்கி கொலை, கொள்ளையிலும் ஈடுபட்டனர்.

1996-ம் ஆண்டு சென்னையில் திமுக பொறுப்பேற்றவுடன் நுங்கம்பாக்கத்திலும், அடையாரிலும் முக்கிய தாதாக்கள் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர். பின்னர் அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் திறமையாக செயல்பட்ட காவல்துறை பல குண்டர்களை சிறையில் அடைத்தும், என்கவுன்ட்டர்கள் மூலமும் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சென்னையின் பிரபல தாதாக்கள் என்கவுன்ட்டர் மூலம் தீர்த்துக்கட்டப்பட சிலர் திருந்தி வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சமீப காலமாக மீண்டும் 1990-களின் நிலைக்கு தமிழகம் தள்ளப்படுமோ என்ற நிலை உருவாகி வருகிறது.

இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். காவல்துறையின் முக்கியப் பணி கண்காணிப்பு, குற்றத்தடுப்பு, பின்னர் தான் நடவடிக்கை. ஆனால் முதலிரண்டு செயல்களில் காவல்துறை எப்போது சறுக்கினாலும் மூன்றாவது செயலை போலீஸார் செய்ய முடியாது.

கண்காணிப்பு என்பதுதான் காவல்துறையின் பிரதான பணி. அதற்காகவே காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு (ஒசிஐயூ), புலனாய்வுப் பிரிவு (இண்டலிஜெண்ட்) சிறப்புப் புலனாய்வு பிரிவு (எஸ்பிசிஐடி), நுண்ணறிவுப் பிரிவு (ஐஎஸ்), போன்றவை உள்ளன.

இதிலும் உட்பிரிவாக அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதிய அமைப்புகள், தீவிரவாத அமைப்புகளைக் கண்காணிக்க உட்பிரிவுகள் உள்ளன. இது தவிர சிறப்புப் பிரிவாக ரவுடிகள் கண்காணிப்புப் பிரிவு என்று தனிப்பிரிவே உள்ளது. இவர்கள் வேலை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்றழைக்கப்படும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த, கைது செய்ய உதவுவது.

ரவுடிகள் எப்படி உருவாகிறார்கள்?

பெரும்பாலும் ரவுடிகள் தங்கள் சட்டவிரோத செயலில் முன்னுக்கு வந்தவுடன் ஏதாவது அரசியல் பின்புலம், சாதியப் பின்புலம் மூலம் மேலும் தங்களை பலப்படுத்திக்கொள்கின்றனர். சிலர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கின்றனர். இது காவல்துறைக்கு சவாலான விஷயமாகும்.

இன்னும் சிலர் தங்களை தனிப்பட்ட முறையில் வளர்த்துக்கொண்டு தனக்கென கூலிப்படையை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து, மாமுல், ஆட்கடத்தல், ஆட்களை கூலிக்கு கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கிருந்தே திட்டம் தீட்டி வேலையை முடிக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் சிறையில் இருக்கும் ஜூனியர் ரவுடிகளை தங்கள் பக்கம் கொண்டுவர ஒரு ஒருங்கிணைந்த இடமாக சிறைவாசம் இவர்களுக்கு உதவுகிறது.

சமீபத்தில் ரபீக் என்ற கைதியிடம் சிறையில் பயிற்சி பெற்ற ஒரு செயின் பறிப்பு குற்றவாளி வெளியில் வந்து ஒரு கூட்டாளியை உடன் வைத்துக்கொண்டு ரூ.10 லட்சம் கள்ள நோட்டுகளையும், 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளையும் வடமாநிலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து விற்றுள்ளார்.

இரண்டாவது தடவை அவர் மேலும் 6 துப்பாக்கிகள், 4 லட்சம் கள்ள நோட்டுகளுடன் சென்னைக்கு வரும்போது சிக்கினார். இதுபோன்ற செயல்களுக்கும், கூலிப்படை திட்டங்களுக்கும் சிறைச்சாலை சிறந்த இடமாக உள்ளது கவனிக்கத்தக்கது. சிறைச்சாலையில் உள்ள சில ஓட்டைகள் காரணமாக தாதாக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. சாதாரண இடத்தில் ஜாமர் கருவி போடும் அதிகாரிகள் சிறைச்சாலையில் இதுவரை அதைப் பொருத்த தயக்கம் காட்டுவது ஏன் என்பது யோசிக்க வேண்டிய கேள்வி.

சிறைக்குள் கண்காணிப்பு கேமரா ஏன் பொருத்தக்கூடாது என்று நீதித்துறை கேள்வி எழுப்பிய பின்னரும் அதிகாரிகள் அசையவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மறுபுறம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று முடங்கிப்போய் கிடப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னைக்கு அருகில் மிக முக்கியமான இடத்தில் தாதா பிறந்த நாளை கொண்டாட ரவுடிகள் நூற்றுக்கணக்கில் குவியும் நிகழ்வு ஒரு ரவுடியை பிடித்து யதேச்சையாக விசாரிக்கும் போதுதான் தெரிய வருகிறது. சாதாரணமாக சிறிய விஷயங்களை கூட கண்காணிக்கும் உளவுப்பிரிவும், நுண்ணறிவுப்பிரிவும் இதில் கோட்டை விட்டது காவல் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்காணிப்பே இப்படி கேள்விக்குறியானால், அடுத்த பணியான குற்றத்தடுப்பு எப்படி இயங்குகிறது என்று ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவரைக் கேட்டபோது அவர் சலித்துக்கொண்டார். அடப்போங்க சார் குற்றத்தடுப்பு என்பதற்கு அர்த்தமே குற்றப்பிரிவு காவல் பலமாக இருப்பதுதான். ஆனால் சென்னையிலோ மற்ற பெரு நகரங்களிலோ என்ன நடக்கிறது. ஒரு அதிகாரியை தண்டிக்க வேண்டுமானால் அவரை குற்றப்பிரிவுக்கு மாற்று எனும் நிலைதான் உள்ளது.

குற்றப்பிரிவு காவல் (கிரைம் டிபார்ட்மென்ட்) என்பது தொடர்ச்சியான ஒரு செயல்பாட்டின் அங்கமாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தும் அதிகாரிகள் இருந்தது ஒரு காலம். சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபாடுள்ளவர்களை தூக்கி குற்றப்பிரிவில் நியமிப்பது, குற்றப்பிரிவு போலீஸாரை பந்தோபஸ்து பணிக்கு பயன்படுத்துவது, குற்றப்பிரிவில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை வேறு பிரிவுக்கு மாற்றுவது என அதன் அமைப்பையே சிதைத்து விட்டார்கள் என அந்த அதிகாரி வருத்தப்பட்டார்.

சென்னை அயனாவரத்தில் சமீபத்தில் ஏடிஎம் ஊழியர் ரூ.20 லட்சத்துக்கு மேலான பணத்துடன் மாயமானார். மாதங்கள் பல கடந்தும் இதுவரை குற்றவாளி சிக்கவில்லை. காரணம் போலீஸார் பற்றாக்குறை இருக்கும் போலீஸாரும் பந்தோபஸ்த் பணிக்கு போனால் எங்கிருந்து குற்றவாளியை பிடிப்பது என்கின்றனர்.

முன்பெல்லாம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் கடுமையாக பார்க்கப்பட்டன. ஆனால், தற்போது அவற்றை போலீஸார் லட்சியமே செய்வதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட சிலர்.

காவல்துறை என்பதே மற்ற அணிகள் போல் ஆளுங்கட்சி காவலர் அணி எனபது போல் மாற்றிவிட்டனர். காவல்துறை இன்று செயலிழந்து உள்ளது. காவல்துறை பற்றிய பயமே இல்லாமல் சென்னையின் பிரதான இடத்தில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஒன்று கூட முடிகிறது என்றால் இவர்களுக்கு போலீஸைப்பற்றிய பயம் இல்லை அல்லது மாமூலுக்கு போலீஸார் பழகி விட்டார்கள் என்றுதான் என்னத்தோன்றுகிறது என்கிறார் சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம்.

நமது போலீஸாரின் அதிகபட்ச டெக்னாலஜியே செல்போன் எண்களை கண்காணிப்பது மட்டுமே, அல்லது சாதாரண விசாரணை அளவிலேயே இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

புதிய பிரச்சினையாக வடமாநில நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களும் தமிழக போலீஸாருக்கு சவாலாக மாறிவருகிறார்கள். அரிவாள் கலாச்சாரம் போய் துப்பாக்கிகள் குறைந்த தொகைக்கே கிடைக்கின்றன. அதனால் துப்பாக்கி கலாசாரத்திற்கு ரவுடிகள் மாறிவருவது ஆபத்தான விஷயம் என்கிறார் சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம்.

சென்னையில் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரின் செயல்பாடுகளைப் பல இடங்களில் கண்காணித்து வேகப்படுத்த வேண்டும் என்பதையே ரவுடிகள் பிறந்த நாள் பார்ட்டி நமக்கு உணர்த்துகிறது என்கிறார் காவல்துறை பற்றி அறிந்த பத்திரிகையாளர் ஒருவர்.

தமிழகம் அமைதிப் பூங்கா என்ற பெயர் உண்டு, ஆனால் நடக்கும் நிகழ்வுகள் தமிழகம் வடமாநிலங்களுக்கு இணையான தாதாக்கள் இடமாக மாறி வருகிறதோ என்ற எண்ணம் தலை தூக்குகிறது. தகுதி வாய்ந்த அதிகாரிகளை சரியான இடத்தில் நியமிப்பதும், அதற்கென உள்ள துறைகளை முறையாக செயல்பட வைப்பதும், காவல்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதன் மூலமே அமைதியான தமிழகம் சாத்தியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x