Published : 23 Jan 2024 09:07 PM
Last Updated : 23 Jan 2024 09:07 PM

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப் பயணம் பிப்.6-ல் தொடக்கம் @ தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சுற்றுப்பயணம் பிப்ரவரி 6-ம் தேதி தூத்துக்குடியில் துவங்கும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இன்று (ஜன.23) பகல் 12 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கையை பெறுவார்கள்.

இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பிப்.5-ல் தூத்துக்குடி, பிப்.6-ல் கன்னியாகுமரி,பிப்.7-ல் மதுரை, பிப்.8-ல் தஞ்சாவூர், பிப்.9-ல் சேலம், பிப்.10-ல் கோவை, பிப்.11-ல் திருப்பூர், பிப்.16-ல் ஓசூர், பிப்.17-ல் வேலூர், பிப்.18-ல் ஆரணி, பிப்.20-ல் விழுப்புரம், பிப்.21,22,23-ல் சென்னை, ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

இந்த நகரங்களுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு வருவதற்கு முன்பாக, இக்குழு வருவதை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதோடு, கோரிக்கை மனு பெறுவதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அந்ததந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x