Published : 23 Jan 2024 04:54 PM
Last Updated : 23 Jan 2024 04:54 PM

மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ - மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மநீம நிர்வாகக் குழு மற்றும் செயற்கைக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டு வருவதை மனதில்கொண்டு மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ உருவாக்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-வது ஆண்டு துவக்க விழாவினை பிரமாண்டமான அளவில் நடத்துவது.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாத இறுதியில் நடத்துவது.
  • தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் நலன்களுக்கு உகந்த, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளுக்கு ஒத்துவரக்கூடிய தேர்தல் வியூகங்களை உருவாக்க தகுதிசால் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நிர்வாகக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
  • மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பாட்டுக்காக மக்கள் நீதி மய்யம் ஆற்றிவரும் பணிகளை வலுப்படுத்தும் விதமாக ‘மாற்றுத் திறனாளிகள் அணி’ உருவாக்குதல்.
  • காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டு வருவதை மனதில்கொண்டு மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ உருவாக்குதல்.
  • ஜனவரி 25-ம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’. ஒவ்வொரு தேசிய வாக்காளர் தினத்தின் போதும் தலைவர் கமல்ஹாசன் வீடியோக்கள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். இளைஞர்கள் அவசியம் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என்பதை அவர் கலந்துகொள்ளும் கல்லூரி விழாக்களில் வலியுறுத்தி வருகிறார். அவரது வழிகாட்டுதல்படி, மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விரிவான பிரச்சாரங்களைக் களத்திலும் சமூக ஊடகங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
  • மநீம தலைவரின் சிந்தனைகளின் தொகுப்பாக வெளியாகி இருக்கும் ‘மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. கமல் பண்பாட்டு மையத்தின் இம்முயற்சியை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுகிறது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள், ஆட்டோ தொழிற்சங்கம், மற்றும் மகளிர் உள்ளிட்ட 200 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்கள்.இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட செயலாளர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பிறகு மாணவர்களை சந்தித்த மநீம தலைவர், அரசியலின் மாற்றம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x