Published : 11 Aug 2014 10:18 AM
Last Updated : 11 Aug 2014 10:18 AM

நீலகிரியில் அணைகள் நிரம்புவதால் விரைவில் மின் உற்பத்தி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் பருவ மழையால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், மின் உற்பத்தி மீண்டும் தொடங்க உள்ளதாக மின் வாரிய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின்கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833.77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பெரிய அணையான அப்பர் பவானியில் சேகரிக்கப்படும் தண்ணீர், ராட்சதக் குழாய் மூலமாக அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. தற்போது தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால், அணைகள் நிரம்பி வருகின்றன.

நீர் இருப்பு (அடி):

அப்பர் பவானி -157 (210), முக்குருத்தி -83.5 (84), பைக்காரா -82.5 (99), சாண்டிநல்லா -12.5 (39), கிளன்மார்கன் 66 (70), மாயார் -15 (17), பார்சன்ஸ்வேலி 55 (77), போர்த்திமந்து 108 (130), அவலாஞ்சி 122 (171), எமரால்டு 125 (184), குந்தா 85 (89), கெத்தை 150 (156).

அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி ஆகிய நீர் மின் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. மின் உற்பத்திக்கான சிக்கல் நீங்கியுள்ளதால், மின் வாரியத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அணைகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இதனால் பெரும்பாலான நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால், அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் மின் உற்பத்திக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் நீங்கியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x