Last Updated : 22 Jan, 2024 03:51 PM

1  

Published : 22 Jan 2024 03:51 PM
Last Updated : 22 Jan 2024 03:51 PM

புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு திடீரென இடிந்து விழுந்து தரைமட்டம்

படம்: எஸ்.எஸ்.குமார்

புதுச்சேரி: வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக, புதுச்சேரியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு சாய்ந்து முழுவதுமாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

புதுச்சேரியில் நகரத்தின் மேட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் வெளியேறும் வழியாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது. பல ஆண்டுகளாக இதை சீரமைக்காமல் உள்ளனர். இதற்கு மேலே காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணம் தராத காரணத்தால் இந்தப் பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மதியம் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக வாய்க்காலின் மண் அள்ளும் பணியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்து தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அப்பகுதி மக்கள் கூடி வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து ஒதியன்சாலை போலீஸாரும் அங்கு வந்தனர். வாய்க்காலுக்கு அதிகப்படியான மணல் தோண்டுவதால் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அதன் அருகே நின்றிருந்த பொதுமக்கள்,போலீஸார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் அங்கிருந்து ஓடினார்கள்.

இடிந்த கட்டடம் பற்றி விசாரித்தபோது, சேகர் - சித்ரா தம்பதியினர் கட்டி உள்ள மூன்று மாடி கட்டிடம் இது. இன்னும் சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த புது வீடு இன்று விழுந்துள்ளது. வீடு கட்டுமான பணி நிறைவு பெற்றும் கிரகபிரவேசம் நடக்காததால் வீட்டின் உள்ளே யாரும் இல்லை. வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x