Last Updated : 22 Jan, 2024 05:10 AM

1  

Published : 22 Jan 2024 05:10 AM
Last Updated : 22 Jan 2024 05:10 AM

தமிழகத்தில் ரயில் பாதை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை: ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள புதிய ரயில் பாதை, இரட்டை பாதை திட்டங்களுக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. தாம்பரத்தை ரயில் முனையமாக மாற்ற பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகள், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. அதன்படி, புதிய இரட்டை பாதை, அகலப் பாதைகள் ஏற்படுத்துவது, அடிப்படை வசதிகள், ரயில் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்களை பெற ரயில்வே வாரியத்தில் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அந்தந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்த பட்டியலை மாநில அரசுகள் தயார் செய்து அனுப்பி வருகின்றன. இதுபோல, முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிக்கையை தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு ரயில்வே மண்டலங்களும் அளித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகம், கேரள ரயில்வே திட்டங்களின் நிலவரம் குறித்து, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை - மாமல்லபுரம் - கடலூர் (179 கி.மீ.) திட்டம், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ.) திட்டம், திண்டிவனம் - நகரி (179 கி.மீ.) திட்டம், பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ.) திட்டம் உட்பட பல்வேறு புதிய ரயில் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.4,445 கோடி. ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பல ஆண்டுகளாக பணிகள் மந்தமாக நடக்கின்றன.

இதுபோல, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் தற்போது திருநெல்வேலி வரை முடிக்கப்பட்டு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி வரை மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த ரயில் திட்டங்களுக்கும், முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் முனையம் வேண்டும்: தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் இரா.பாண்டியராஜா கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அதுபோல, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற போதிய நிதி ஒதுக்க வேண்டும். இங்கு கூடுதல் நடைமேடைகள் அமைத்து, சென்ட்ரல், எழும்பூர்போல மாற்ற வேண்டும்.

புதிய பாதை, அகலப் பாதை, இரட்டை பாதை திட்டங்கள் அமைப்பதற்கு இணையாக, ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் அமைப்பதும் அவசியம். இதற்கு நிதி ஒதுக்க வேண்டும். நடைமேம்பாலம், மின்தூக்கி, நகரும் படிக்கட்டு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். முக்கிய திட்டமான, சென்னை எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை திட்டத்தை நிறைவேற்ற முழு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, ஆண்டுதோறும் தெற்கு ரயில்வே சார்பில் ஓர் அறிக்கையை அனுப்பி வைக்கப்படும். அதன்படி, புதிய பாதை, இரட்டை பாதை, ரயில் பணிமனை மேம்பாடு, ரயில்வே தொழிற்சாலை விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் நிலவரம் குறித்து அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு பணி முடிந்துள்ளது, எவ்வளவு செலவாகியுள்ளது, இன்னும் எவ்வளவு நிதி தேவை என்பது குறித்தும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், போதிய நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x