Last Updated : 18 Jan, 2024 09:31 PM

4  

Published : 18 Jan 2024 09:31 PM
Last Updated : 18 Jan 2024 09:31 PM

திமுக அரசுக்கு ‘மைலேஜ்’ கொடுக்குமா புதிய ஜல்லிக்கட்டு அரங்கு? - ஒரு விரைவுப் பார்வை

தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ‘ஜல்லிக்கட்டு’ சந்திக்காத சிக்கல்களும் அரசியலும் இல்லை. தற்போது, ஜல்லிக்கட்டுக்கு தனித்த அரங்கம் அமைத்து, ‘ஸ்கோர்’ செய்துள்ளது திமுக.

  • 2006-ம் ஆண்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த ஒரு வழக்கில், நீதிபதி ஆர்.பானுமதி, ‘ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை’ விதித்து உத்தரவிட்டார். தடையை எதிர்த்து பல்வேறு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டமும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
  • 2011-ம் ஆண்டு இந்த ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக, ‘பீட்டா’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
  • 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. இந்த உத்தரவால், 2015-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டு காளைகள் அடிமாடுகளாக விற்கப்பட்டன.
  • 2016-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டு நடத்தும் நோக்கத்தில், ‘காட்சிப்படுத்தப்படும் பிராணிகள் பட்டியலில்’ காளையைச் சேர்த்து, மத்திய பா.ஜ.க., அரசு உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் அந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

ஜல்லிக்கட்டு நிரந்தர தடையை மறு சீராய்வு செய்யக் கோரி, அதிமுக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு, 2016 நவம்பர் மாதம் தள்ளுபடியானது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத் தொடங்கினர். அவர்களுடன் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டு பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. அது மக்களின் தென்னெழுச்சிப் போராட்டமாக இருந்தது குறிப்பிடதக்கது. அப்போராட்டம் வெற்றியும் பெற்றது; மீண்டும் தமிழ் நாட்டில், ஜல்லிக்கட்டு களைகட்டத் தொடங்கியது.

அதன்பின், 70ஸ் கிட்ஸ் தொடங்கி 2கே கிட்ஸ் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டை காண வரும் மக்கள் திரள் அதிகரித்து வருகிறது. எனவே, ஜல்லிக்கட்டை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக அனைத்து கட்சிகளும் கருதத் துவங்கின. இந்த நிலையில், தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள திமுக அரசு, தமிழக மக்களின் வீரம் மற்றும் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டுக்குத் தனித்த அரங்கம் அமைத்து, ‘ஸ்கோர்’ செய்துள்ளது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின், “தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை’ வரும் 24-ம் நாள் திறந்து வைத்து, போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம். எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அரங்கத்தில், 66 ஏக்கரில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கக் கேலரி வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பெரிய அளவில் வாகனம் நிறுத்துவதற்கான இடமும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மூன்று வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியமான வீர விளையாட்டாக இருந்தாலும், காலம் காலமாக மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும், மாடுகள் முட்டி காயம் அடைவதும் உயிரிழப்பதும் தொடர்கிறது. இரு நாட்களுக்கு முன், சிவகங்கை மாவட்டம், சிறாவயல் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே, ‘‘உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை உயிரிழப்பு இல்லாமல் நடத்துவதே குறிக்கோளாகக் கொண்டு கீழக்கரை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது’’ என, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், வரும் 24-ம் தேதி அரங்கம் திறக்கப்படவுள்ளது.

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால்தான் ஜல்லிக்கட்டு காளைகள் தமிழக மண்ணில் துள்ளிக் குதிக்கின்றன. தற்போது, அதற்கு திமுக கயிறு போடத் தொடங்கியுள்ளது. அரங்கம் அமைந்திருக்கும் திமுகவுக்கு இது எந்த அளவுக்கு மைலேஜ் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x