Published : 18 Jan 2024 05:11 AM
Last Updated : 18 Jan 2024 05:11 AM

மாடுபிடி வீரர் மதுரை கார்த்திக், காளை உரிமையாளர் திருச்சி குணாவுக்கு கார் பரிசு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மிகுந்த உற்சாகத்துடன் நடந்தது. 18 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான மதுரையை சேர்ந்த கார்த்தி, சிறந்த காளையாக தேர்வான அதன் உரிமையாளரான திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த குணாவுக்கு முதல் பரிசாக கார்கள் வழங்கப்பட்டன.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிநேற்று நடந்தது. தமிழக இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொடி அசைத்து தொடங்கி வைத்து கோயில் காளையை அவிழ்த்துவிட்டார். போட்டியில் 810 காளைகள் பங்கேற்றன. 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். முதலில் உள்ளூர் கிராமக் கோயில் காளைகளான முனியாண்டி, கருப்பசாமி, வலசை கருப்புசாமி ஆகிய கோயில்களின் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. கோயில் காளைகள் என்பதால் அவற்றை வீரர்கள் பிடிக்கவில்லை.

வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட ஒவ்வொரு காளையும் துள்ளிக்குதித்து ஓடி வர, அதை வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் அடங்காமல், மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் சீறிப் பாய்ந்தன. திமில்களை பிடித்து அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. சிறந்த காளைகளுக்கும், மிரட்டிய காளைகளை அடக்கி வீரத்தை நிரூபித்த வீரர்களையும் அமைச்சர் உதயநிதி மேடைக்கு அழைத்து மோதிரம் வழங்கி பாராட்டினார்.

ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள், அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். காளையை அடக்கும் வீரர்கள், அடக்க முடியாத, அடங்காத காளைகளுக்கு தங்கக் காசு, மோதிரம், பீரோ, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மெத்தை, சைக்கிள் எனஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டைமான், பாஜகதலைவர் அண்ணாமலை, அமமுகதலைவர் டிடிவி.தினகரன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்ராஜசேகரன், நடிகர் சூரி ஆகியோர் சார்பில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரர்களால் பிடிக்க முடியவில்லை.

போட்டி ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 6.15 மணிக்கு முடிந்தது. 18 காளைகளை பிடித்த மதுரைகருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திசிறந்த வீரராக தேர்வானார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 2022-ல் இதே அலங்காநல்லூரில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகி கார் பரிசு பெற்றவர்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த குணாவின் ‘கட்டப்பா’ சிறந்த காளையாக தேர்வாகி முதல் பரிசாக அமைச்சர் உதயநிதி சார்பில் கார் வழங்கப்பட்டது.

17 காளைகளை அடக்கி 2-வது இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் எம்.குன்னத்தூர் திவாகர், 3-வது சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2-வது சிறந்த காளையாக மதுரை காமராஜர்புரம் வெள்ளக்காளி சவுந்தரின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் தளபதி (மதுரை வடக்கு), பூமிநாதன் (தெற்கு), தமிழரசி (மானா மதுரை),வெங்கடேசன் (சோழவந்தான்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டில் 31 வீரர்கள், 18 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள், 6 காவல் துறையினர், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 83 பேர் படுகாயமடைந்தனர். 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி பேசியபோது, ‘‘ஜல்லிக்கட்டு விளையாட்டை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இதை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் அலங்காநல்லூர்அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்போல, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டை லீக் முறையில் இந்த அரங்கில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு சார்பில் நடத்தப்படும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலைவழங்குவதற்கான கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x