Published : 17 Jan 2024 06:00 AM
Last Updated : 17 Jan 2024 06:00 AM

6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்: ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் கடும் அதிருப்தி

சென்னை: தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையிலும், அதன்பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும் நிரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், முதல்முறையாக 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு போட்டித் தேர்வை நடத்தியது. அத்தேர்வு மூலம் முதல்கட்டமாக 2019-ம் ஆண்டு ஓவியம், தையல், இசை பாட சிறப்பாசிரியர்களும், அதைத்தொடர்ந்து, 2020-ல் உடற்கல்வி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்வழி ஒதுக்கீடு: பொது தேர்வு பட்டியலுடன் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வு பட்டியலும் அப்போது வெளியிடப்பட்டது. ஆனால், தமிழ்வழி ஒதுக்கீடு தொடர்பாக சென்னைமற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக தமிழ்வழி ஒதுக்கீடுதேர்வு பட்டியல் பின்னர் ரத்துசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று பின்னர் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தன. ஆனாலும் தமிழ்வழி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழ்வழி ஒதுக்கீடு அல்லாத பொது பட்டியலில் தேர்வானவர்கள் அடுத்தடுத்து பணியில் சேர்ந்து விட்டனர்.

இதற்கிடையே, பொது தேர்வு பட்டியலில் ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு காலியிடங்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்காததால் அரசு விதிமுறை யின்படி, அக்காலியிடங்கள் அந்தந்த சமூகப்பிரிவுக்கு மாற்றப்பட்டு அதற்கான தேர்வு பட்டியல் கடந்த 12.10.2021-ல் வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும்அந்த தேர்வு பட்டியலை சம்பந்தப்பட்ட துறைக்கு (பள்ளிக்கல்வி, சமூக பாதுகாப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம்) அனுப்பவில்லை. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து நேரில் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர்கள் பிரச்சினை ஒருபுறம் இருக்க, தமிழ்வழி ஒதுக்கீடு கோரிய விண்ணப்பதாரர்கள் அதற்கான தேர்வு பட்டியல் 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் வெளியிடப்படாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழ்வழி ஒதுக்கீடு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கூறும்போது, "ஆரம்பத்தில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் காரணம் கூறினர். இப்போது எந்த வழக்கும் நிலுவையில் கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலும் அவர்களிடம் இருக்கிறது. எனவே, தமிழ்வழி ஒதுக்கீடு இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x