Published : 17 Jan 2024 05:29 AM
Last Updated : 17 Jan 2024 05:29 AM

மணலி, எண்ணூர் மக்கள் பாதுகாப்புக்கு சிறப்பு நிதி, திட்டங்கள்

எண்ணூர்

சென்னை: மணலி - எண்ணூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சிறப்பு நிதி மற்றும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், வடசென்னை பகுதியின் வளர்ச்சிக்கென ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ தொடர்பான அறிவிப்பு, கடந்தாண்டு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கும் வரை, சில திட்டங்களை உடனடியாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மாசு சுமை, உமிழ்வு விதிமுறைகள், கழிவுகள் மற்றும் பறக்கும் சாம்பல் வெளியேற்றம் மற்றும் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீரின் தரத்தை கண்காணிக்க, சிறப்பாக ஒரு மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நவீன தானியங்கி அமைப்புகள் மூலம் மாசுவை கண்காணிக்க இம்மையம் தகுதிவாய்ந்த ஊழியர்களைக் கொண்டிருக்கும். இம்மையத்துக்கு உதவியாக மணலி மற்றும் எண்ணூர் பகுதியில் பிரத்யேகமாக இரண்டு பறக்கும் படைகள் நிறுத்தப்படும்.

மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம் ஒரு அவசரகால நடவடிக்கைக் குழுவை அமைக்கும். இது வழக்கமான மாதிரி பயிற்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இடைவெளிகளை நிவர்த்தி செய்ய மணலி - எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துணர்வு நிறுவனம் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தை அரசு ஏற்படுத்தும்.

மணலி - எண்ணூர் பகுதியில் பெருமளவிலான நகர்ப்புற பசுமையாக்குதல், நீர்நிலைகளைப் புனரமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கை, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள ஒரு சிறப்பு நிதி உருவாக்கப்படும். இந்த சிறப்பு நிதிக்கான ஆதாரம், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமும், தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலமும் உருவாக்கப்படும்.

இப்பகுதியில் உள்ள அனைத்து சிவப்பு வகை தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தணிக்கையை தொழில் பாதுகாப்பு இயக்குநரகம், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளும்.

திருவொற்றியூரில் அரசு சார்பில் 50 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை மற்றும் 100 படுக்கைகள் கொண்ட நகர்ப்புற சமுதாய நல மையம் ஆகியவை ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. உடனடி மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க, கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்படும்.

இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணி, நீர் தெளிப்பான்கள் மூலம் தூசி மாசுபாட்டைக் குறைப்பதற்கான விரிவான திட்டத்தை உள்ளடக்கிய திடக்கழிவு மேலாண்மை பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து சாம்பல் அணைக்கட்டுக்கு ஈரமான சாம்பலை எடுத்துச் செல்லும் குழாய்கள் புதுப்பிக்கப்படும். உள்ளூர் மீனவ சமூகங்களை ஈடுபடுத்தி நிபுணத்துவ முகமைகளின் உதவியுடன் இப்பகுதியில் நிலையான மீன்பிடிப்புக்கான நடவடிக்கைகளை மீன்வளத் துறை மேற்கொள்ளும்.

எண்ணூர் கழிமுகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை புனரமைக்கும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது. இப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உதவும் வகையில் இப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மீட்டெடுக்கவும் இத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் எண்ணூர் மணலி பகுதிகளில் உள்ள தொழில்சார் திறன் தேவைகளைக் கண்டறிந்து இளைஞர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தலைசிறந்த நிறுவனங்களுடன் இணைந்து பயண ஊக்கத் தொகையுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சி வழங்கப்படும். அமோனியா வாயு கசிவு குறித்தான விசாரணையில் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அமோனியா வாயு கசிவு குறித்து ஏற்கெனவே ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அக்குழுவின் இறுதி அறிக்கை பெறப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக மக்களின் நலனையும் நல்வாழ்வையும் இரு கண்களாகக் கருதி, கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வரும் தமிழக அரசு, இத்திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x