

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமேசுவரத்தில், சுற்றுலா மாளிகையில் திருவள்ளுவர் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில் ஆன்மிக பூமியானநமது தமிழகத்தில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் மரியாதை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் நேற்று தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் நாம் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுகிறோம். திருக்குறளில் அமைந்துள்ள அவரது ஆழ்ந்த ஞானம், வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது. நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், அவரது தொலைநோக்கு பார்வையை உறுதியுடன் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழகத்தில் வள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது. குறள்நெறி நம் வழி, குறள் வழியே நம் நெறி” என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நா.அருள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.