புதுச்சேரி பொங்கல் பரிசில் கூடுதலாக ரூ.250 - ஆளுநரிடம் மேடையில் ஒப்புதல் பெற்ற முதல்வர்

புதுச்சேரி பொங்கல் பரிசில் கூடுதலாக ரூ.250 - ஆளுநரிடம் மேடையில் ஒப்புதல் பெற்ற முதல்வர்

Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்காக ரூ.500 வங்கி கணக்கில் செலுத்திய நிலையில், கூடுதலாக ரூ.250 தருவதற்காக முதல்வர் ரங்கசாமி தந்த கோப்புக்கு, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், புதுவை அரசுகள் பொங்கல் பொருட்களும், பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.500 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் பொங்கல் பொருட்களுக்கான ரொக்கத் தொகையுடன் இலவச அரிசிக்கான 3 அல்லது 4 மாத தொகையும் சேர்த்து வழங்கப்படும். இதனால் சிகப்பு ரேஷன் அட்டைதாரர்கள் சுமார் ரூ.3 ஆயிரம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,500 கிடைத்தது. தற்போது பொங்கல் பொருட்களுக்கு ரூ.500 மட்டுமே கிடைத்துள்ளது. இலவச அரிசிக்கான பணம் பற்றிய அறிவிப்பு இல்லை. தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.1000 பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, புதுவை முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசாக கூடுதலாக ரூ.250 வழங்கும் கோப்பினை தலைமைச் செயலாளருக்கு அனுப்பினார். நிதியில்லை என்பதால் தலைமைச் செயலாளர் அந்தக் கோப்பை திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி இன்று துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்கு வந்தார். அப்போது விழா மேடையிலேயே அமைச்சர்கள், கலைஞர்கள் முன்னிலையில் ஆளுநரிடம் கூடுதலாக ரூ.250 பொங்கல் பரிசு வழங்கும் கோப்புக்கு கையெழுத்து பெற்றார்.

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் தரப்பில் கூறுகையில், "பொங்கலையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ரூ.250 சேர்த்து தர குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதன் மூலம் புதுச்சேரியிலுள்ள 3 லட்சத்து 38 ஆயிரத்து 761 அட்டைதாரர்கள் பயன்பெறுவர். மொத்தம் ரூ. 8.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in