“புதுச்சேரி கடற்கரையில் கற்கள் கொட்டியதில் மிகப் பெரிய ஊழல்” - உடனடி விசாரணைக்கு காங். வலியுறுத்தல்

புதுச்சேரி காலாப்பட்டில் மீனவ காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி காலாப்பட்டில் மீனவ காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Updated on
2 min read

புதுச்சேரி: கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மீனவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல் எல்லை குறித்து மத்திய அரசு தயாரிக்கும் வரைபடம் குறித்து மீனவ மக்களின் கருத்துக்களைக் கேட்டு அறிய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி புதுச்சேரி மாநில மீனவ காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

காலாப்பட்டில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரியில் மீனவ மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. கடல் அரிப்பு காரணமாக இங்குள்ள மீனவ மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

கடற்கரையில் கொட்டப்பட்ட கற்களானது சரியான முறையில் கொட்டப்படவில்லை. அந்த கற்கள் சரிந்து மீண்டும் கடலுக்கே சென்றுவிடுகிறது. முழுமையான பணியாக இதனை செய்யவில்லை. இது மிகப் பெரிய குறையாக இருக்கின்றது.பிள்ளைச்சாவடி, பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் போன்ற பகுதிகளில் கடல் அரிப்பு என்பது மிகுந்த வேதனை தருவதாக இருக்கின்றது. கடல் எல்லை குறித்து மத்திய அரசு தயாரிக்கும் வரைபடம் மீனவ மக்களை ஒரு இடத்திலேயே குறுக்கி வைத்துவிடக்கூடிய நிலை வந்திருக்கிறது. அந்த வரைபடத்தை ஒரு கேள்விக்குறியாக வைத்திருக்கின்றனர்.

மீனவ மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை தர வேண்டும். மீனவர்களின் நிலைப்பாடு பழங்குடியின மக்களுக்கு இணையாக இருக்கிறது. மலையில் வாழும் மக்கள் எப்படி கஷ்டப்படுகின்றனரோ, அதேபோன்று மீனவர்கள் கடலில் சென்று நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்ய முடியாமல் இருக்கின்றனர். ஆகவே மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தற்போது உள்ளவர்கள் கடற்கரையில் பார்வையிடுகின்றனர், ஆய்வு செய்கின்றனர். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை.

கற்கள் கொட்டுவதாக சொல்லி கொட்டியுள்ளன. பெரிய அளவிலான கற்கள் கொட்டாமல் சிறிய அளவிலான உடைந்த கற்களைக் கொட்டியதால் அவை காணாமல் போய்விட்டன. கற்கள் கொட்டியதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது. எனவே உடனடியாக இதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். சரியான முறையில் கடல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in