Last Updated : 10 Jan, 2024 07:41 PM

 

Published : 10 Jan 2024 07:41 PM
Last Updated : 10 Jan 2024 07:41 PM

மதுரை துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்: இருவர் கைது; திமுக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு

மதுரையில் தாக்குதல் நடத்தப்பட்ட மதுரை துணை மேயர் வீடு

மதுரை: மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு, அலுவலகம் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பிரமுகர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி துணை மேயராக உள்ளார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனது மனைவியோடு இருந்தபோது,வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கும்பல் அவரை தாக்க முயன்றது. கதவை திறக்காததால், ஆத்திரம் அடைந்த அக்கும்பல், வீட்டின் முன்பக்க கதவு, அலுவலகத்தை சேதப்படுத்தி தப்பியது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டோரை கைது செய்ய வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். துணை மேயர் வீட்டுக்குள் புகுந்தவர்கள் குறித்த உண்மையான பின்னணியை விசாரித்து, துரித நடவடிக்கை எடுக்க அக்கட்சியினர் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக துணைமேயர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் 9-ம் தேதி மாலை 6.45 மணிக்கு அலுவலக பணிக்காக வீட்டில் இருந்து வெளியே கிளம்பியபோது, எனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த புல்லட்டை எடுக்கச் சென்றேன். நேதாஜி தெருவைச் சேர்ந்த லோகேஷ்வரன் மற்றும் 3 பேர் கையில் கத்தி, வாள்களுடன் என்னை நோக்கி, தாக்க முயன்றனர். அவர்கள் ‘ வட்டச் செயலர் கண்ணன், துணை வட்டச் செயலர் முத்து வேலுக்கு எதிராகவா அரசியல் செய்கிறாய், உன்னை கொன்று புதைக்காமல் விடமாட்டோம்’ என மிரட்டினர்.

லோகேஷ்வரன் வாளால் என்னை நோக்கி வெட்ட முயன்றார். தலையை சாய்த்ததால் உயிர் பிழைத்தேன். லோகேஷ்வரன் மற்றும் அவருடன் வந்திருந்த 3 பேரும் என்னை அரிவாளால் தாக்க முயன்றும், முடியாததால் வெளியில் நின்ற எனது புல்லட், மனைவியின் ஸ்கூட்டி, வெளிக் கதவை சேதப்படுத்தினர். அக்கம், பக்கத்தினர் திரண்டதால் அருகிலுள்ள எனது அலுவலகத்தையும் சேதப்படுத்தி தப்பினர்.

வாகனங்கள் உள்ளிட்டவைகளின் சேத மதிப்பு ரூ.75 ஆயிரம். இச்சம்பவம் திமுக வட்ட செயலர் கண்ணன், துணைச் செயலர் முத்துவேல் ஆகியோர் அரசியல் காரணமாக துண்டிவிட்டு இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். என்னை கொலை செய்ய முயற்சித்து, பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் மீதும், இதற்கு தூண்டுதலாக இருந்த கண்ணன், முத்துவேல் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின்பேரில், திமுக வட்டச் செயலர் கண்ணன், துணை வட்டச் செயலர் முத்துவேல், லோகேஷ்வரன்(21), இவரது நண்பர் சீனிமுகமது இஸ்மாயில் (20) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் லோகேஷ்வரன், சீனிமுகமது இஸ்மாயில் ஆகியோரை காவல் ஆய்வாளர் கதிர்வேல் கைது செய்தார். பிறரை தேடி வருகின்றனர்.

இது குறித்து துணைமேயர் கூறுகையில், "எனக்கும், திமுக பிரமுகர்கள் கண்ணன், முத்துவேல் ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக அவர்கள் துண்டுதலின் பேரிலே இச்சம்பவம் நடந்திருப்பது தெரிகிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களையும் கைது செய்ய வேண்டும்.எனது வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்" என்றார்.

பெண் விவகாரம் காரணமா? - போலீஸ் தரப்பில்கேட்டபோது, "லோகேஷ்வரன் என்பவர் ‘ போக்சோ ’ வழக்கு ஒன்றில் சமீபத்தில் சிக்கினார். இதற்கு துணை மேயரே காரணம் என அவர் மீது கோபமாக இருந்துள்ளார். மேலும், லோகேஷ்வரன் காதலித்த பெண் ஒருவர் அவரைவிட்டு பிரிந்ததால், அந்தப் பெண்ணை லோஷ்வரன் தாக்கியுள்ளார். இது தொடர்பாக லோகேஷ்வரன் தந்தையை துணை மேயர் தரப்பு கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இருப்பினும் வேறு கோணத்திலும் விசாரிக்கிறோம்", என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x